தமிழர்களிற்கு நீதியை வழங்குவது தொடர்பில் பிரிட்டன் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்

55 0

ஆயுதமோதலின் இறுதிநாட்களில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற படுகொலைகளிற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கம் டெபனயர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிதருணங்களில்  கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும் இடம்பெற்ற பரந்துபட்ட மனித உரிமை மீறல்களையும் நாங்கள் இன்று நினைவுகூருகின்றோம் என என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார்.

இன்று எனது சிந்தனைகள் தாங்கள் எதிர்கொண்ட அநீதிகள் காரணமாக தொடர்ந்தும் வேதனையுடன் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் அவர்களின் அன்புக்குரியவர்கள் குறித்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் என்பது எப்படி  இழந்தவர்களை நினைகூரும் நாளோ அதேபோன்று குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் நாள் என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார்.

மோதல் முடிவிற்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு 15 வருடங்கள் கிடைத்தன எனினும் அர்த்தபூர்வமான விசாரணையை அது  முன்னெடுக்காமல் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் மக்களிற்கு நீதியை வழங்குவது குறித்த உத்தரவாதங்களை நிறைவேற்ற தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் தமிழ் மக்களிற்கு ஆதரவை வழங்கவேண்டும் இலங்கை அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்

யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவது தொடர்பான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படு த்துவது ஆராய்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.