கிர்கிஸ்தானில் வன்முறை வெடித்ததால் பதற்றம்: இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

84 0

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள்.இந்த நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நள்ளிரவு வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

இதில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கும் எகிப்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.இந்த நிலையில் கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-நாங்கள் எங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.

தற்போது நிலைமை அமைதியாக உள்ளது, ஆனால் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் கண்காணித்து வருகிறோம்.

தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.