மாநகர பேருந்துகளில் 12 மணி நேரம் வேலை புகார்: பணிமனைகளில் தொழிலாளர் துறை ஆய்வு

84 0

மாநகரப் பேருந்துகளில் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை தரப்படுவதாக சிஐடியு அளித்த புகாரைத் தொடர்ந்து பணிமனைகளில் தொழிலாளர் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் 8 மணி நேரம், 16 மணி நேரம் முறையில் பணிபுரிகின்றனர். 8 மணி நேர பணிக்கு ஒரு வருகை பதிவும், 16 மணி நேர பணிக்கு இரண்டு வருகை பதிவும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு 8 மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றி ஒரு வருகை பதிவுடன் ரூ.500 ஊதியமும் அளிக்கப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) எதிர்ப்பையடுத்து இந்த முறை கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தற்போது 12 மணி நேரம் வேலை முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, 140-க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்களில் 12 மணி நேர வேலை வழங்கப்படுகிறது. இது மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக இருப்பதால் இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும் என சிஐடியு சார்பில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதில் நடவடிக்கை இல்லாத நிலையில், சரக வாரியாக தொழிலாளர் ஆய்வாளர்களிடம் சிஐடியு நிர்வாகிகள் புகாரளித்தனர். இதையடுத்து, அண்மையில் பெரம்பூர், அயனாவரம் உள்ளிட்ட பணிமனைகளில் தொழிலாளர் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, பல்வேறு பணிமனைகளிலும் ஆய்வு நடத்தி, விரைவில் சிஐடியு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

இது தொடர்பாக சிஐடியு நிர்வாகிகள் கூறும்போது, “12 மணி நேர வேலை என்னும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நடவடிக்கை சட்டப்படி தவறானதாகும். இது தொழிலாளர்களின் உடல் நலன், இயற்கை நியதிக்கும் எதிரானதாகும். ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலையும், 8 மணி நேரம் ஓய்வும், 8 மணி நேரம் உறக்கமும் பெறவேண்டும். போராடி பெற்ற இந்த உரிமையை பறிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள 12 மணி நேர வேலை முறையை கைவிட வேண்டும்.

தொழிலாளர் ஆய்வாளரின் ஆய்வைத் தொடர்ந்து, மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் 1961 அத்தியாயம் – 5 மீறப்பட்டது உறுதியாகும். அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்றனர்.