இலங்கை தமிழ் அரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் இன்று (18) பகல் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இதன்போது உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூஜை, வழிபாடுகள் இலங்கை தமிழ் அரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையினரால் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரி காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும் முன்னாள் போராளியுமான ஆண்டி ஐயா விஜயராஸவினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர், முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் காரைநகரில் இடம்பெற்றது.
இதில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான தவமணி, நாகராஜா, சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.