பிரேசில் சிறையில் கைதிகள் இடையே மோதல் – 5 பேர் பலி

250 0

பிரேசில் சிறையில் இரு தாதா கும்பல்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைக் கண்ட ஒரு கைதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

பிரேசில் நாட்டில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்கள் காரணமாக உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கைதிகள் இடையே நடந்த மோதல்களில் பல கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு மத்திய மேற்கு மாகாணமான மாட்டோ கிராஸ்சோ மாகாணத்தில் உள்ள சிறையில் நேற்று முன் தினம் இரு தாதா கும்பல்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைக் கண்ட ஒரு கைதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

17 கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இரு தரப்பினரும் பயன்படுத்திய 2 துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். அங்கு அமைதியை நிலைநாட்ட சிறைத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.