மே..18 இன அழிப்பின் அடையாளம்-கவிபாஸ்கர்

70 0

மே..18.. எம்
இதயத்தின் சுவரில்
இடி விழுந்த மாதம்…
தமிழினப் படுகொலையை
பறைசாற்றும் மாதம்..
யார் அறிவார்… எம்
வலியை..??
வலிக்கான வழியை..
படிப்போம்…
இனியொரு நாளில் அந்த
பெரு வரலாற்றை படைப்போம்..!!

முள்ளிவாய்க்கால் – எம்
இன அழிப்பின் நினைவுச் சின்னம்,
அது…அழுகுரலின் தலை நகரம்!

இனப்பைகயும் விசப்புகையும்
எம் மூச்சுக்காற்றைக் குடித்த இடம்
முள்ளிவாய்க்கால் பெருநிலம்!

நந்திக் கடேலாரம் .. எம்மை
வஞ்சித்த நாடுகளை
நாங்கள் சந்தித்த நிமிடத்தில் – எம்
சந்ததிகளை தொலைத்தோம்!

வெள்ளைக் கொடியேந்தி
எம் சமாதானப் புறாக்கள்
எம் கண்முன்னே மாண்டதை
கண்ணுற்றோம்!

பாஸ்பரஸ் குண்டுகளில் வடிந்த
கந்தக காற்றை நித்தம் நித்தம்
சுவாசித்தோம்!

குருதியாற்றில்
கொத்துக் கொத்தாக
எமது உறவுகள் தத்தளித்த
மறக்க முடியுமா எம்மால்???

வெள்ளி முளைக்குமென
விழித்திருந்த தேசத்தில்
கொள்ளி வைக்கப்பட்ட
முள்ளிவாய்க்காலை
மறக்க இயலாது!

முள்ளிவாய்க்கால்
இன அழிப்பின் குறியீடு
பேரவலத்தின் பெயர்ச்சொல்..

சிங்கள ஒநாய்கள் ஒன்றுகூடி
குருதி குடித்தக் களம்
முள்ளிவாய்க்கால் பெருநிலம்!

அன்று
நசிங்கிய குரலைத் திறந்து
தொண்டை கிழிய கதறினோம்!
பொசிங்கிய உயிரை துறந்து
எலும்புக்கூடாய் புலம்பினோம்!

உலகநாடுகளின் காதுக்கதவுகள்
திறக்கவே வில்லை! இன்றும்
அந்த…அறத்தின் திறவுகோல்
பிறக்கவே இல்லை!

பாருங்கள்… இன்றும் நாங்கள்..
உறவுகள் துறந்துவிட்டு
இரவுகள் சுமக்கிறோம்!
முகவரி இழந்துவிட்டு
அகதியாய் திரிகிறோம்!

இறந்தத் தாயின் மார்பில்
பசிக்கு பால் தேடும் குழந்தைகளின்
இரத்த சாட்சிகளின்
கோரக்காட்சிகள் எந்த மண்ணில்
இதுவரை எங்கே…நிகழ்ந்தது?

மரத்தை வெட்டினால் கூட
மன்னிக்க மறுக்கும்
இவ்வுலகில்
மனிதர்களை வெட்டினார்களே!
ஏன் மறுத்தது
மனிதம் பேசுகிற இந்தமானுடம்?
சிந்தித்திருப்போமா…?

கொலையுண்ட நாங்கள்
அரை நூற்றாண்டுக்கு மேலாக
அலறுகிறோமே!
எங்களுக்கான நீதி
ஏன்? நெளிந்து கொண்டே போகிறது!

காதுகள் பூட்டிய பொய்க் கயவர்களே..
உங்களுக்கு இதயம் இருக்கிறதா
இல்லையா?..

இது வரை அறமன்றங்கள் என்ன
செய்து கிழித்திருக்கிறது!
மனச்சான்றோடு சொல்லுங்கள்!

இன்னும் இன்னும் கணக்கற்ற
எலும்புக் கூடுகளாய் உறங்குகிறது
எம் உறவுகளின் உடல்கள்!

நீதி தோண்டி எடுக்கும் என
நாங்கள் இன்னும் எத்தனை
நாட்கள் நம்புவது!.. பதிலுரையுங்கள்..

ஆனாலும் இன்னும்
முடியவில்லையே
சிங்களவனின் இனவெறி!
அது வெவ்வேறு
வடிவங்களில் அல்லவா
சுழலுகின்றன!.. புரியவில்லையா…?

எமது வீடுகளில் எங்களை
அகற்றி சிங்களன் குடிபெயர்கிறான்
எமது காணி நிலத்தை களவாடி
அவன் பயிர் செய்கிறான்!
எமது மொழியை மாண்பை
அகற்றி பண்பாட்டை
படையில் ஏற்றுகிறான்! ஏன்?

நாங்கள் கட்டிய
புறாக்கூட்டில் பாம்புகள்
படுத்துறங்குவதை
அனுமதிப்பது…ஏன்..??
இது தான்
வல்லாதிக்க நாடுகளின் தீர்வா?

பேரணி..பேரணியாய்
கூட்டம் கூட்டமாய்
அறவழியில் அன்றாடம்
அலைகிறோம்
ஐ.நா. வாசலில் முன்பு

இன்னுமா!
கொலைச்சான்றுகள்
தேடுகிறது இந்த ஐ.நா.?

எத்தனை ஆவணங்கள்
எத்தனை சாட்சிகள்
எத்தனை முறை மான்றாடல்
எத்தனை முறை அழுகுரல்
இன்னுமா உரைக்கவில்லை!

ஆண்ட இனத்தின்
அடிச்சுவட்டை
உலக ஆண்டைகள்
அசைத்துப் பார்த்ததை
எமது இனம்
எப்போதும் மறக்காது..

விடுதலை
இலட்சியத்திற்காக தமது
வித்துடலை விதையாக
விதைத்து வீர ஈழமண்ணை
ஈகத்தால் நிரப்பிய நாடு
எமது தமிழீழ நாடு!

2009 மே 18
தமிழர் இனப்படுகொலை
உலகம் பார்க்க நடந்தேறியது!
யார் காதுக்கும்
அந்த ஓலம் கேட்கவே இல்லை!
இன்றும்.. அந்த குரல்
ஒலித்துக் கொண்டுதான்
இருக்கிறது…

எமது மண்ணுக்காக
உயிர் நீத்த மாவீர மக்களை
எமது வரலாறு
புகழ்ந்து எழுச்சிக் கொள்ளும்!

மே.. 18
தமிழின அழிப்பு நாளில்
எம் ஈகியரின் இலட்சியக் கனவை
நெஞ்சில் எழுதிக் கொள்வோம்!

மே 18
முள்ளிவாய்க்கால் நினைவும்
நந்திக்கடல் ஈரக்காற்றின் அதிர்வும்
எம்மை எப்போதும்
எழுப்பிக் கொண்டே இருக்கும்

சூரியன் மறைந்தாலும்
மடியாது –
இலட்சிக் கனவுகள்
வெல்லாமல் போகாது!