இறுதிப்போரின்போது நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.
அகவணக்கத்துடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாக, முள்ளிவாய்க்கால் பிரகடனம் செய்யப்பட்டு, அதன் பின்னர் பிரதான சுடர் ஏற்றப்படவுள்ளது.
குறித்த சுடரை பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி ஒருவர் ஏற்றவுள்ளதோடு அதனைத்தொடர்ந்து, கைச்சுடர் ஏற்றப்பட்ட அஞ்சலி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பேதங்களைத்துறந்து, சுயலாப, சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந்நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு,கிழக்கு) கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் 18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு அனைத்து ஆலயங்களிலும், கோவில்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன் அன்று இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவு கூருமாறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கோரியுள்ளது.
பவணி இணையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப்பவணி கடந்த 12ஆம் திகதி வடக்கில் ஆரம்பமாகியிருந்த நிலையில் தாயகத்தின் எட்டுமாவட்டங்களுக்கும் விஜயம் செய்வதை இலக்காகக் கொண்டிருந்தது.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஊர்திப்பவணி சென்ற நிலையில் பொதுமக்கள் அஞ்சலியைச் செலுத்திய நிலையில் 18 ஆம் திகதி சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு காலை பத்துமணிக்கு சென்றடையவுள்ளது.
சர்வதேச பிரதிநிதி பங்கேற்பு இந்நிகழ்வில், சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அவர் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவுள்ளதோடு ஊடக சந்திப்பையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இந்த நினைவுகூரல் நிகழ்வில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
வவுனியாவில் ஏற்பாடு போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இன்று மாலை 5மணிக்கு வவுனியப நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வன்னி மக்களுக்கான ஒன்றியம், வன்னி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிறந்த இலங்கைக்கான மன்றம், காணாமலாக்கப்பட்டவர்களின் பிள்ளைகளின் சங்கம், உலகத் தமிழர் பேரவை, தர்மசக்தி ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வம மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் ஏற்பாடு இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் காலை 11மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர். அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டள்ள முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வும் விசேட வழிபாடுகளும் பட்டிப்பளையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் காலை 9.30இற்கு ஆரம்பமாகவுள்ளதோடு ஆத்மசாந்தி வேண்டி விசேட வழிபாடுகளை அடுத்து நினைவேந்தலும், நினைவுரையும் நடைபெறவுள்ளதோடு அன்னதான நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கொழும்பில் ஏற்பாடு வடக்கு,கிழக்கு மாகணங்களில் நடைபெறும் நினைவேந்தல்களுக்கு ஆதரவாகவும், நீதியையும் பொறுப்புக்கூறலையும் நாங்கள் கோருவதற்கான ஒரு வெளியாகவும் இன்று காலை 9.30இக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேநேரம், வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில் விசேட வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.