விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

229 0

விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவது தொடர்பாக, அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தற்போது தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியை அமைக்க தமிழக அரசு முடிவுசெய்து அதற்கு விருதுநகரைத் தேர்வு செய்துள்ளது கண்டு இந்த மாவட்ட மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றனர். இந்த ஆண்டு அமையவிருக்கும் இந்த புதிய பல் மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படவிருக்கின்றனர். கல்லூரியை அமைத்து அதை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஒரு முதல்வர் பதவியும் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையையும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த கல்வியாண்டிலேயே இந்த பல்மருத்துவக்கல்லூரி செயல்பாட்டுக்கு வந்து விடும். கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரியை விருதுநகர் மாவட்டத்துக்குக் கொண்டு வருவதற்கான பணிகளையும் நாங்கள் முழுமையாக முயற்சி செய்து வருகின்றோம். அந்த முயற்சிக்கும் கூடிய விரைவில் பலன்கிட்டும் என்ற நம்பிகையில் செயல்பட்டு வருகின்றோம். இந்த பல்மருத்துவக் கல்லூரி அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு விருதுநகர் மாவட்ட மக்களின் சார்பில் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.