வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் – அமெரிக்க தூதுவர்

53 0

வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கால்நடை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும், இயந்திர தொழில்நுட்ப பயன்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது  ஆளுநர் தெரிவித்தார்.

காணி விடுவிப்பு, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர்,  ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார்.

ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்படுவதாகவும்  ஆளுநர் கூறினார்.

மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்ககூடிய கண்காட்சி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம்,  ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

வடக்கிற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்புகளை  ஆளுநரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

27 வருடங்களின் பின்னர் அமெரிக்க அமைதி காக்கும் கழகத்தின் ஊடாக இலங்கையில் இலவச ஆங்கில மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கூறினார்.