இலங்கையின் கடன் மறுசீரமைப்புசார் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் நாணய நிதியம் விளக்கமளிப்பு

41 0

இலங்கையின் அண்மைக்கால பொருளாதார அடைவுகளைப் பாராட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கொஸாக், கடன் மறுசீர மைப்பு செயன்முறையில் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படவேண்டிய நகர்வுகள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.

வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பில், இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கடந்த மார்ச் 21ஆம் திகதி உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. இம்மீளாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் முடிவுறுத்தப்படுவதற்கு இரண்டு விடயங்கள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

முதலாவது முன்கூட்டியே நிறைவேற்றுவதாக அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இரண்டாவது நிதியியல் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். இந்நிதியியல் உத்தரவாதம் தொடர்பான மீளாய்வானது  கடன் மறுசீரமைப்பில் அடையப்பட்டுள்ள போதியளவு முன்னேற்றத்தையும் உள்வாங்கும்.

அந்த வகையில் இலங்கையின் நுண்பாக பொருளாதாரக் கொள்கைகள் வலுவடைய ஆரம்பித்துள்ளன. தொடர் பணவீக்க வீழ்ச்சி, கையிருப்பு உயர்வு, பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்ப குறிகாட்டிகள், நிதியியல் கட்டமைப்பு உறுதிப்பாடு உள்ளிட்ட இலங்கையின் அடைவுகள் பாராட்டத்தக்கவையாகும். அதேபோன்று ஒட்டுமொத்த செயற்றிட்ட நடைமுறையும் வலுவான நிலையில் காணப்படுகிறது.

கடன் மறுசீரமைப்பை பொறுத்தமட்டில் வெளியக தனியார் கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்யவேண்டியிருப்பதுடன், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் எட்டப்பட்ட கொள்கை இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயன்முறை பெருமளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. சர்வதேச பிணைமுறிதாரர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடுமின்றி கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் முடிவுக்கு வந்தது.

அதேவேளை அவர்களுடன் கொள்கை இணக்கப்பாட்டை எட்டும் நோக்கிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் பக்கத்தில் கொள்கை இணக்கப்பாடுகள் இன்னமும் இறுதியாக உறுதிப்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளன என்றார்.