நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு கோடை விடுமுறையில் விசாரணை

265 0

தமிழக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு வெற்றி பெற்றதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை மே முதல் வாரத்தில் விசாரிப்பதாக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டும் கோடை விடுமுறையான மே மாதம் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு வெற்றி பெற்றதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை மே முதல் வாரத்தில் விசாரிப்பதாக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி தமிழக எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவைத் தலைவர் வக்கீல் கே.பாலு உள்பட பலர் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளுக்கு தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துவிட்டார். அதில், ‘விதிகளுக்கு உட்பட்டுத்தான் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. தி.மு.க. உறுப்பினர்கள் சபையை நடத்தவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் மேற்கொள்ளப்பட்டது’ என்று கூறியிருந்தார்.

சட்டசபை செயலாளரின் இந்த பதில்மனுவிற்கு, மு.க.ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் என்று சட்டசபை செயலாளர் கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானவை. சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்த முழு வீடியோ பதிவை அவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. தி.மு.க. உறுப்பினர்களுக்கு எதிரான காட்சிகளை கொண்ட, தணிக்கை செய்யப்பட்ட வீடியோ பதிவை மட்டும் தாக்கல் செய்துள்ளார். போலீஸ் உயர் அதிகாரிகளை, அவைக்காவலர் சீருடையில் சட்டசபைக்குள் அனுப்பி எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் சபாநாயகரும், சட்டசபை செயலாளரும் செயல்பட்டனர். எனவே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். அந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சிலர் பதில் மனுதாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் கூறினார்கள். அதற்கு எதிர்மனுதாரர் தரப்பு வக்கீல்கள், ஒரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்கள்.

அப்போது மனுதாரர் கே.பாலு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, ‘இந்த வழக்கு சபாநாயகருக்கு உள்ள தனி உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்டது என்பதால், இரண்டிற்கும் மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட முழு அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார்கள்.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற வாரத்தில் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நீதிபதிகள், ‘அது சாத்தியம் இல்லை. இந்த வழக்குகள் ஒரு நாள் முழுவதும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், பிற வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு கோடை விடுமுறையில் ‘முத்தலாக்’ தொடர்பான வழக்குகளையும், சமூக வலைதளம் தொடர்பான வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்கிறது. ஐகோர்ட்டுக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்தால் என்ன?, நாங்கள் (நீதிபதிகள்) கோடை விடுமுறையில் பணியாற்ற தயாராக இருக்கிறோம். அதற்கு, இந்த வழக்குகளின் அனைத்து தரப்பு வக்கீல்களின் ஒத்துழைப்பும் தேவை’ என்று கருத்து தெரிவித்தனர்.

இதற்கு அனைத்து தரப்பு வக்கீல்களும், கோடை விடுமுறையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், நாங்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கூறினார்கள்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற மே 2 மற்றும் 3-ந் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.