மஹிந்தவின் ஆலோசனைகள் கேலிக்குள்ளாவதையிட்டு பொதுஜன பெரமுன வெட்கப்பட வேண்டும்

34 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு அப்பாற்பட்டு ஜனாதிபதி, அரசாங்கம் செயற்படுவதைவிட்டு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும்.

பொதுஜன பெரமுன அறிக்கை ஊடாக வெளிப்படுத்தும் எதிர்ப்பைச் செயல் வடிவில் காண்பிக்க வேண்டும்.பொருளாதார மறுசீரமைப்பு சட்ட மூலத்தைத் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனச் சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரச நிறுவனங்களை மறுசீரமைக்க முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை முழுமையாக இடைநிறுத்துமாறும், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்தாபிக்கப்படும் புதிய அரசாங்கத்துக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தலுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டு 72 மணித்தியாலங்களுக்குள் அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்றுக்காண்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதற்கு உரிய ஒப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்காக ‘ பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலத்தை’ கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொண்டுள்ளார்.இந்தச் சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் தலைவராகக் கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ தற்போதைய அரச நிர்வாகத்தினால் எந்தளவுக்கு நெருக்கடிக்குள்ளாகப்பட்டுள்ளார் என்பது இதனூடாக வெளிப்படுகிறது.தேசிய வளங்களைத் தனியார் மயப்படுத்தவும், பங்குகளை விற்பனை செய்யவும் அரசாங்கத்துக்கோ, ஜனாதிபதிக்கோ மக்களாணை கிடையாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதத்தில் ஜனாதிபதி பதவிக்கு வந்த தலைவரும், அரசாங்கமும் அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு எதிராகச் செயற்படுவதைவிட்டு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.அரச நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகக் கடிதத்தினூடாக மாத்திரம் எதிர்ப்பை வெளிப்படுத்துவது போதுமானதாக இல்லை என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளங்கிக் கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு அமையச் செயற்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் சிறந்த யோசனைகளைச் செயற்படுத்துவதில்லை.

செயற்திட்டங்கள் வெளிப்படைத்தன்மையான விலை மனுகோரலுடன் இடம்பெற வேண்டும் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் வெளிப்படைத்தன்மை என்பதற்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா விநியோகம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிட முடியும்.

பொதுஜன பெரமுனவின் தலைவரைக் கேலிக்கைக்கு உள்ளாக்கும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து எதனைச் சாதிக்கப் போகின்றீர்கள் என்பதைப் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் வினவுகிறேன்.பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதத்தில் தான் சகல முறைகேடுகளையும் அரசாங்கம் முன்னெடுக்கிறது.அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்றால் பொருளாதார மறுசீரமைப்பு சட்ட மூலத்துக்கு எதிராகப் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.