குற்றச்செயல்களின் மூலம் பெறப்படும் சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்

29 0

குற்றச்செயல்கள் மூலம் மோசடியான முறையில் சம்பாதித்த சொத்துக்களை அரச உடமையாக்கும் வகையில் புதிய சட்டம்  கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுப்போம் என நீதி, சிறைவாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

கண்டி நீதிமன்ற கட்டிட வளாகத்தில்  சட்டத்தரணிகளுக்கான புதிய காரியாலயம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதியை நிலைநாட்டு நடவடிக்கையில் முக்கியமான விடயமாக இருப்பது, வழக்கு நடவடிக்கையில் சிக்கிக்கொண்டிருக்கும் பொது மக்களாகும்.

சட்டத்தரணிகளால்  மேற்கொள்ளப்படுவது வேலை  அல்ல. அது கெளரவமான தொழிலாகும். யாராவது ஒருவர் நீதிமன்றத்தை நாடுவது, அவரது பிரச்சினைக்கு தீர்வுகாண வேறு ஒரு இடம் இல்லாத படியாகும். அதனால் நீதிமன்றத்துக்கு வரும் வாடிக்கையாளரின் உரிமையை நாங்கள் பாதுகாத்துக்கொடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எமது நாட்டு பொதுளாதாரம் வீழ்ச்சியடைந்தது. நாடு அராஜகமானது. நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை.

அவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாடு அராஜகமாகி பொருளாதாரம் வீழ்ந்து, சட்டத்தின் ஆட்சி  வீழ்ந்தாலே நாடு ஸ்திரமற்றதொரு நிலைக்கு சென்றது. நாட்டின் பொருளாதாரத்தை பலம்மிக்கதாக கட்டியெழுப்ப சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்தே ஆகவேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட, ஆட்சிக்குட்பட்டவர்களும்  ஆட்சியாளர்களும் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். கடந்த இரண்டு வருடங்களில் 75 புதிய சட்ட திட்டங்களை அனுமதித்துக்கொள்ள நீதி அமைச்சுக்கு முடியுமாகி இருந்தது.

குற்றச் செயல்களின் மூலம் பெறப்படும் சொத்துக்களை அரசுடமையாக்குவது  தொடர்பான புதிய சட்டம் கொண்டுவர கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதியை பெற்றுக்கொண்டோம். அதனை விரைவாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்வோம். அதன் பிரகாரம் குற்றச் செயல்களின் மூலம் பெறப்படும் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.