நாட்டில் சிறந்த சூழல் உருவானதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும்

36 0

கீழ்த்தரமான அரசியல் நோக்கங்களுக்காகவே ஒரு தரப்பினர் பாராளுமன்ற கலைக்கப்படுவதாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை. நாட்டில் சிறந்த சூழல் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் உரிய நேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை, ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாடு. பல சந்தர்ப்பங்களில் வன்முறைகள், கலவரங்கள் தோற்றம் பெற்றுள்ளன.

இருப்பினும் ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கம் ஒருபோதும் தோற்றம் பெறவில்லை. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த பாதுகாப்புத் தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தாபன விதிக்கோவை, நிதி ஒழுங்கு விதிகள் என்பன தற்போதும் நடைமுறையில் உள்ளன.

சிறந்த அரச நிர்வாகத்துக்காகவே இவை அறிமுகப்படுத்தப்பட்டன. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன அரச அதிகாரிகள் ஊடாக செயற்படுத்தப்படுகின்றன. ஆகவே, அரச நிர்வாகத்தின் ஏற்பாடுகளை பாதுகாக்க வேண்டும்.

இலங்கை ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. ஆகவே ஜனநாயகமின்றேல் எதுவுமில்லை. 2022ஆம் ஆண்டு போராட்டத்தின்போது நாட்டில் ஜனநாயகம் என்பதொன்று இருக்கவில்லை.

தனிநபர்கள் சட்டத்தை கையிலெடுத்தார்கள். பாராளுமன்றத்தை தீக்கிரையாக்க முயற்சித்தார்கள். பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கி, மக்கள் பிரநிதிகளை கொலை செய்ததன் பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா என்பதை போராட்டக்காரர்கள் சிந்திக்கவில்லை.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை  பாதுகாக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அரச நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. குறைகளை விமர்சிப்பதுடன், நிறைகளையும் குறிப்பிட வேண்டும். நெருக்கடியான சூழலின்போது ஊடகங்கள் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கீழ்த்தரமான அரசியல் நோக்கங்களை கொண்டுள்ளவர்கள் தான் இவ்வாறு குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை. நாட்டில் சிறந்த சூழல் உருவானதன் பின்னர் உரிய நேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றார்.