யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிழ்வு.

317 0

கடந்த 02.05.2024 அன்று உடல்நலக் குறைவினால் யேர்மனியின் வூப்பெற்றால் நகரில் இயற்கையெய்திய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர். திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு பெருமளவான தாயக மக்கள் புடைசூழ மிகவும் உணர்வுபூர்வமாக, அவர் வாழ்ந்த வூப்பெற்றால் நகரிலே நடைபெற்றது.

யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உப அமைப்புக்களான, தமிழ்க்கல்விக்கழக ஆளுகைக்குட்பட்ட வூப்பெற்றால் நகரத் தமிழாலய ஆசிரியராகத் தமிழ் விருத்தியின் அர்ப்பணிப்பு மிக்கதான தொடர் பணியாற்றியதோடு, இருபது வருட நிறை நல் பணியின் விருதுப் பட்டயமாக “தமிழ்வாரிதி” எனும் சிறப்பினை ஏலவே பெற்றிருந்தார். அத்தோடு அனைத்துலகத் தமிழ்க்கல்விக்கழக நூலாக்கக் குழுவிலும் யேர்மனிய தமிழ்க்கல்விக்கழக சார்பான தனது பங்கேற்பையும் நல்கியிருந்தார்.

யேர்மனிய தமிழ்ப்பெண்கள் அமைப்பின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளராகவும் பின்னாளில் அவ்வமைப்பின் நிருவாகப் பொறுப்பாளராகவும் இடைவிடாத சிறந்த சேவையாற்றினார். இவருடைய அர்ப்பணிப்புமிக்க சேவையினை மதித்து, தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டுதலின்படியான மதிப்பீட்டு அலகு நெறிக்கூடாக “நாட்டுப்பற்றாளர்” எனும் உயர்ந்த மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.

வூப்பெற்றால் நகரில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் காலை 10.00 மணிக்கு அவரது புகழுடலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கையேற்று, உறவினர்கள், தேசியச் செயற்பாட்டாளர்கள், பெருமளவான மக்கள் சூழ்ந்துவர, தேசியச் செயற்பாட்டாளர்கள் தமிழீழ் தேசியக் கொடியைத் தாங்கி வந்து நாட்டுப்பற்றாளரது புகழுடல்மீது போர்த்தித் தலைசாய்த்து நிற்க, பொது ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளரது துணைவரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வூப்பெற்றால் நகரின் நீண்டகாலச் செயற்பாட்டாளருமான திரு. பீற்றர் கீதபொன்கலன் அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் தொடர்பகமூடாக வழங்கப்பட்ட நாட்டுப்பற்றாளருக்கான மதிப்பளிப்புப் பட்டயம் வாசித்தளிக்கப்பட்டு, வழமைபோன்று பட்டயம் உட்பட புகழுடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி மற்றும் நாட்டுப்பற்றாளராக உறுதியளிக்கப்பெற்ற திருவுருவப் படமென்பன குடும்பத்தாரிடம் வழங்கிவைக்கப்பெற்றது.

நாட்டுப்பற்றாளரது நிறைவான தேசப்பணி பற்றிய மீள்பார்வையின் வடிவிலே மிகவும் உணர்வுபூர்வமாக எல்லோரது கண்களும் கண்ணீர் மல்க, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் வணக்கவுரையாற்றியதைத் தொடர்ந்து, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உத்தியோக பூர்வமான வணக்க அறிக்கையும் வாசித்தளிக்கப்பெற்றது.

தமிழ்க்கல்விக் கழகத்தின் யேர்மனியப் பொறுப்பாளரது வணக்க உரையும், தமிழ்க்கல்விக்கழகத்தின் உத்தியோகபூர்வமான அறிக்கையும் நாட்டுப்பற்றாளரது மகத்தான, நிதானமான கல்விப்புலப் பணிப் பக்கங்களை எல்லோர் மனத்திரையிலும் மீண்டும் உணர்வுபூர்வமாகக் கோடிட்டுக் கொண்டதோடு, முன்மாதிரித் தன்மைகளையும் நிரூபணமாக்கியது. தொடர்ந்து அனைத்துலகக் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் செயல் மதிப்பு அறிக்கையும் வாசித்தளிக்கப்பெற்றது.

யேர்மனிய தமிழ்ப்பெண்கள் அமைப்பின் மதிப்புமிக்க வணக்க உரையும், அவர்களது உத்தியோக பூர்வ அறிக்கையும் மண்டம் நிறைந்திருந்த மக்களது ஒட்டுமொத்த உணர்வலைகளையும் கண்ணீரால் நிரப்பியது. நகமும் சதையுமாக தம்மோடு ஒருகூட்டில் வாழ்ந்த ஒரு சிறந்த ஆளுமையான தோழியின் புகழுடலைச் சூழ்து தமது இறுதி வணக்கத்தை வழங்கிய காட்சி மகத்தான தேசப்பணிக்கான வரலாற்று அடையாளமாகக் காட்சியளித்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏனைய உப அமைப்புக்கள், ஏனைய நாடுகளிலிருந்து வருகைதந்த நாட்டுப்பற்றாளரது பல்கலைக்கழகத் தோழிகள், பிற நகரங்களின் தமிழாலய நிருவாகத்தினர்,உறவினர்களென பெருமளவானோர் தமது உள்ளக் கிடக்கைகளை கவிதைகளாகவும், உரைகளாகவும் வழங்கினர். பெருமளவான தாய்த்தமிழ் உறவுகளின் கண்ணீர் நிறைந்த உணர்வலைகளின் மத்தியில், அவது நினைவுகளைத் தாங்கித் தேசப்பணி தொடர்வோமென புகழுடல்மீது உறுதிகொண்டு மலர்தூவி விடையளிக்க, நாட்டுப்பற்றாளர் திருமதி.ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள் விடைபெற்று மனங்களில் நிறைந்தார்.