ரஷ்ய மனித கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது

28 0

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (15) இவர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ராணுவத்தின் சிவில் சேவைக்கு இலங்கையர்களை சுற்றுலா விசா மூலம் அனுப்புவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் தலா 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ள நிலையில், ரஷ்ய-உக்ரைன் போர் களத்திற்கு செல்லும் நிலைக்கே இலங்கையர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த முகவர் நிறுவனம் மேற்கொண்ட மோசடி தொடர்பில் பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த முறைப்பாடுகளின்படி இந்த நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் தொகை ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாகும்.

அதன்படி, நேற்று நுகேகொடை ஸ்டென்லி திலகரட்ன மாவத்தையில் இயங்கி வந்த குறித்த நிறுவனத்தை சுற்றிவளைத்து அதன் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் என இருவரும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.