தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூருவைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் கடந்த 33 ஆண்டுகளாக மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் காந்தி நினைவு ஜோதியை கொண்டு வந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், அதற்குப் பிறகு ஜோதியை டெல்லிக்கு எடுத்துச் சென்று ராஜீவ் காந்திபிறந்த நாளான ஆகஸ்ட் 20-ம் தேதிஅவரது நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்து வந்தது.
இந்நிலையில் எஸ்.எஸ். பிரகாசம் மறைவுக்கு பிறகு 2021-ம் ஆண்டிலிருந்து துரை வேலு தலைமையில் நினைவு ஜோதி பயணம் நடந்து வருகிறது. எனவே, ராஜீவ் காந்தி நினைவுஜோதி யாத்திரையின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் கட்சியினர் எவரும் அதேபோன்ற யாத்திரை நடத்துவதை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. அதை காங்கிரஸ் கட்சியும் அனுமதிக்காது.எனவே, ராஜீவ் காந்தியின் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டுமே தவிர அதன் புனிதத்தை பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.