மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடைகாலம் முடிவதற்குள், ஏரி குளங்களையும், வாய்கால்களையும் தூர்வார வேண்டும். மேலும் மழைநீர் வடிகால் பணிகளையும் சாலைகளையும் ஒரு காலக் கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மே 13 முதல் 18-ம் தேதி வரை கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடுமையான கோடை வெயிலுக்குப் பிறகு, கடந்த சில நாட்களாக பெய்தமழையினால் சாலைகளில் பல இடங்களில்குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கை அளித்தபோதும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூடமும், தமிழக அரசும் சரியான முன்னேற்பாடுகள் செய்யாததால் விற்பனைக்கு வந்த நெல்மணிகளும் கொள்முதல் செய்த நெல்மணிகளும் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியில் கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அவற்றின் பாதிப்புகளை கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கடைமடைகளுக்கு எளிதாகச் செல்லும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதுமட்டுமின்றி, கோடை காலங்களில் ஏரி, குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடைகாலம் முடிவதற்குள் மழைநீர் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளை செப்பனிட்டும், இப்பணிகளை ஒரு காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயனடைய தமிழக அரசு எடுக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.