இராணுவத்தினருக்கு காணி வழங்கும் பணிகளை துரிதப்படுத்த விசேட குழு

32 0

இராணுவ வீரர்களுக்கு காணிகளை வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இராணுவ சேவை அதிகாரசபையின் தலைவர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுப்பினரொருவர் இக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சேவையிலுள்ள, ஓய்வு பெற்ற, பணியின் போது உயிர் நீத்த பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், மற்றும் இராணுவத்தினருக்கு அரச காணி வழங்கப்படவுள்ளது.

இராணுவ வீரர்களுக்கு காணி வழங்கும் வேலைத்திட்டம் இதற்கு முன்னர் பல தடவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அது வெற்றிகரமாகவும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தப்படாமையால் இவ்விடயம் தொடர்பில் பரிசீலித்த ஜனாதிபதி மேற்படி குழுவை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இராணுவத்தினருக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் பரிசீலித்து அதற்கான பணிகளை துரிதமாக ஏற்பாடு செய்வது சம்பந்தப்பட்ட குழுவின் பொறுப்பாகும்.