பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கு இன்னும் முடியாமல்போயிருப்பது மனித இனத்துக்கே இழுக்காகும்.
அதேநேரம் இஸ்ரேலின் இனப்படுகொலையை அரசாங்கம் தற்போதாவது கண்டிக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்மொழிந்துந்த உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இன்று பலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் நிலையை போன்று, நமது முன்னோர்கள், பல நூற்றாண்டுகளாக, ஏகாதிபத்திய காலனித்துவக் கொள்கைகளால் ஒடுக்குமுறைக்கும் வன்முறைக்கும் முகங்கொடுத்து பல துயரங்களை சந்தித்தமையை எமது வரலாற்றின் ஊடாக நாம் காண்கிறோம்.
மேலும், 50 களில் இருந்து ஜவஹர்லால் நேரு, மார்ஷல் டிட்டோ, ஜெனரல் நாசர் உட்பட நம் நாட்டு தலைவர்களும் அணிசேரா முகாமின் தலைவர்களும் காலனித்துவம் மற்றும் நிறவெறிக்கு எதிராக வலுவாக முன்னின்று செயற்பட்ட யுகமாகும்.
ஆனால் சமீப காலமாக, உலகின் நிதி வல்லரசுகள், தங்கள் செல்வம் மற்றும் அதிகாரத்தின் காரணமாக, சர்வதேச அளவில் அந்த ஒற்றுமையை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படுவதை சர்வதேச தளத்தில் எம்மால் காண முடிந்தது.
இறுதி தருணம் வரையில் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியை காப்பாற்றிய சக்திகள், அதேபாணியில் இன்றும் பலஸ்தீன மண்ணில் நடக்கும் அநீதி, அடக்குமுறைகளை மூடி மறைத்து, உலக மக்கள் ஆணைக்கு எதிராக சென்று, பிரிவினைவாத, மனிதாபிமானமற்ற ஆட்சிக்கு அடைக்கலம் கொடுக்க முயல்கின்றன.
மேலும், ஆறு மாதங்களுக்கும் மேலாக பலஸ்தீன மண்ணில் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகள் மற்றும் பேரழிவை உலகின் பலம் வாய்ந்த ஊடகங்களும், நமது நாட்டின் சில பலம் வாய்ந்த ஊடகங்களும் மூடி மறைத்து வந்தாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக பலஸ்தீனத்தின் யதார்த்தம் ஏறக்குறைய சமூகத்திற்கு அம்பலமானது.
உலகெங்கிலும் உள்ள புதிய தலைமுறை, உலகின் எதிர்காலத்திற்கு உரித்துரிமை கொண்ட தலைமுறை, அந்த எதிர்காலத்தை வழிநடத்தப்போகும் தலைமுறை, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பெறுமதிகளுக்கு அர்த்தம் கொடுக்கும் பின்னணியில், இந்த முன்மொழிவு தொடர்பில் இன்று இந்த சபையில் விவாதிக்கிறோம்.
உலகின் பிரதான பல்கலைக்கழக மாணவ தலைமுறையினர் தனது உயிரையும் எதிர்காலத்தையும் அர்ப்பணித்து சுதந்திரம், ஜனநாயகம், நியாயம் மற்றும் நீதிக்காக முன்னின்று போராடும் தருவாயில் இந்த முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடுகிறோம்.
அதுமாத்திரமின்றி இஸ்ரேல் அடிப்படைவாத ஆட்சிக்கும் வன்முறை, ஒடுக்குமுறை, பிரிவினைவாதத்திற்கு எதிராக யூத இன குழுமத்தின் புத்திஜீவிகள், பல்கலைக்கழக பிரஜைகள், இளைஞர்கள் கூட ஒன்றிணைந்துள்ள சூழலில் இந்த விவாதம் நடைபெறுகிறது. இது போன்று 60 களில் வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவில் பரவிய மாணவ போராட்டமே எனது நினைவுக்கு வருகிறது.
கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபையானது பலஸ்தீன அரசுக்கு புதிய உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் தீர்மானத்தை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியது. இது ஐக்கிய நாடுகள் சபையில் முழு அங்கத்துவத்திற்கு வழி வகுத்தது. இந்த முன்மொழிவு தொடர்பான விவாதத்தின் போது, இஸ்ரேலிய பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார் மற்றும் இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கான அமெரிக்க உதவியை குறைக்க எதிர்பார்க்கிறேன் என்று அச்சுறுத்தினார். இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது 143 நாடுகள் இந்த திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் மட்டுமே இதை எதிர்த்தன.
சுதந்திரம், மனித உரிமைகள், நிறவெறி அல்லது இனவெறி போன்றவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் ஒரு நாட்டின் வீட்டோ அதிகாரத்தால் செல்லுபடியற்றதாக்கியதை நாம் காண்கிறோம். சர்வதேச நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றுக்கு தொடர்ந்து சவால் விடுப்பதை நாம் இன்னும் பார்க்கிறோம். மோதல்களை நிறுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி படைகளை நிறுத்துவதற்கான முன்மொழிவுகள் கூட அப்பட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
சுயாதீன விசாரணைக்காக அந்த பூமிக்கு செல்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைக்கும் தொடர்ந்து சவால் விடுக்கப்பட்டு வருகிறது. எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா உட்பட அனைத்து மத்தியஸ்தர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர், ஆனால் நெதன்யாகு ஆட்சி சமாதானத்திற்கான வாய்ப்பை நிராகரித்துவிட்டது.
சர்வதேச அரசியலுக்காக உருவாக்கப்பட்ட மனிதாபிமான அவலத்தைத்தான் இன்று பலஸ்தீன மண்ணில் நாம் காண்கிறோம். காஸாவிற்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை கொண்டு வரும் அனைத்து வாயில்களையும் இஸ்ரேல் தற்போது மூடியுள்ளது. காஸாவில் பாதுகாப்பான பிரதேசம் என்று தற்போது எதுவுமே இல்லை.
ஆறு மாதங்களுக்கும் மேலாக, தினமும் இப்படி மக்கள் கொல்லப்பட்டு, பஞ்சத்தை உருவாக்கி, அதன் மூலம் மக்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள்,ஊடகவியலாளர்கள் என வேறுபாடின்றி அனைவரும் இறக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களால் நடத்தப்படும் இந்த இனப்படுகொலை இன்றைய காலகட்டத்தில் இன்னும் தடுக்கப்படவில்லை என்பது மனித குலத்திற்கே அவமானமாகும் என்றார்.