நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு

52 0

தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மூதூர் சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் இரவு நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்முனையிலும் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்து வெளியிடும்போது சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வைகாசி மாதம் உணர்வுப் பூர்வமானது. அவர்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கான புனிதமான மாதமாகும்.

அவர்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு முழுமையான உரித்துடையவர்கள். அவர்களின் அந்த அடிப்படை உரித்தினை யாரும் நிராகரிக்கவே முடியாது. அவ்வாறு நிராகரிப்பதற்கு இடமளிக்க முடியாது.

அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்துவம், நிராகரிப்பதும் அடிப்படைச் சட்டங்களை மீறுவதாகும். அதேநேரம், திருகோணமலை மூதூரில் தமது உறவுகளை நினைவு கூர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கல்முனையில் நினைவு கூரல் தடுக்கப்பட்டுள்ளது.

இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இவ்விதமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கை விடுகின்றேன்.

எமது மக்களின் உரிமைகளைக் கடந்த ஏழு தசாப்தமாக பறிந்து வருகின்ற நிலையில் தான் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களைப் பகிருமாறு கோரிவருகின்றோம் என்றார்.