மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு

84 0

மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களின் விருப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அவசர கூட்டம்  திங்கட்கிழமை (13) மதியம் 2 மணி முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சாலிய உள்ளடங்களாக குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை பெற்றுக் கொள்ளும் வகையில்,குறித்த நிறுவனத்தினர் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி  செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய,பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழு,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகள்,சமூக மட்ட அமைப்புகள் திணைக்கள தலைவர்கள், கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன் போது அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிட்டெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக திட்டம் தொடர்பாக மக்களுக்கு முன் வைக்கப்பட்டது.இதன் போது மன்னாரிற்கு குறித்த திட்டத்தினால் பாரிய பாதிப்புகள் உள்ளமை குறித்து மக்களாலும்,பொது அமைப்புகளின் பிரதி நிதிகளினாலும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறித்த திட்டம் மன்னாரில் அமுல் படுத்தும் பட்சத்தில் மன்னாரில் பாரியைப் பாதிப்புகள் ஏற்படும் என்ற விடையத்தைச் சுட்டிக்காட்டினார்.

அவரது கருத்தை வருகை தந்த பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,பிரஜைகள் குழுவினர் வரவேற்றனர்.

இதேவேளை மன்னார் தீவில் குறித்த திட்டத்தை அமுல் படுத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் மன்னார் தீவைத் தவிர்த்து வேறு நிலப்பரப்பில் குறித்த திட்டம் தொடர்பான ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்குவது என்றும் மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவு வழங்காத நிலையில்   சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை  மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க முடியாது எனப் பொதுமக்கள் உறுதிய உள்ள காரணத்தினால் குறித்த கூட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது.

மன்னார் தீவில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாததன் காரணத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிக்கை மூலம் தெரியப்படுத்த உள்ளதாக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார்,பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட சமூக மட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.