இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்துக்குப் பயனாளிகளைத் தெரிவு செய்வதில் அரசியல் தலையீடு

48 0

பொகவந்தலாவை பெருந்தோட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்துக்குப் பயனாளிகளைத் தெரிவு செய்வதில் அரசியல் தலையீடு இடம்பெற்றுள்ளது. அதனால் உண்மையான  தேவையுடையவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளும் வகையில் வேலைத்திட்டத்தை இந்திய அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

பொகவந்தலாவை இந்திய வீடமைப்பு திட்டத்துக்கு பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றபோது, அங்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள், இது நாங்கள் முன்னெடுத்த வேலைத்திட்டம். அதனால் எமக்குத் தேவையானவர்களுக்கே வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து, அங்கு பிரச்சினைப்படுத்தியுள்ளனதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வீடமைப்பு இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டமாகும். இதில் இவர்களை தலையிட்டு மேற்கொள்கின்ற நடவடிக்கை இந்திய அரசாங்கத்தை அவமானப்படுத்துகின்ற செயலாகும்.

அதேநேரம் பெருந்தோட்ட மக்களுக்காக அமைக்கப்படும் இந்த வீட்டுத்திட்டத்துக்கு பயனாளிகள் சரியான முறையில் தெரிவு செய்ய, வெளிப்படைத்தன்மையுடனான வேலைத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என இந்திய அரசாங்கத்திடமும் இந்தியத் தூதரகத்திடமும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இல்லாவிட்டால், இராஜகத்துக்கும் அநீதிக்கும் இந்திய அரசாங்கமும் துணைபோகிறது என்ற மோசமான எண்ணம் மக்களுக்கும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகும்.

அதேநேரம் 2021க்கு பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எந்தவித சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  மே முதலாம் திகதி 1700 ரூபா அதிகரிப்பதாக ஜனாதிபதி அறிவிப்பு செய்தார். ஆனால் தற்போது 1200 ரூபாவே  வழங்க முடியும் என முதலாளிமார் அறிவித்துள்ளதாகத் தொழில் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இது பேருந்தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றும் நடவடிக்கை என்பதும் கேளிக்கூத்தாகவும் இருக்கிறது என்றார்.