ரணில், ஜீவன் இந்தோனேஷியா பயணம்

38 0

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறவுள்ள சர்வதேச நீர் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நானும் பங்கேற்கவுள்ளேன்.

இந்த மாநாட்டில் இலங்கையின் நீர் வழங்கல் கட்டமைப்பு தொடர்பில் விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இம்மாநாடு இந்தோனேஷியாவில் இடம்பெறவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நான் உட்பட முக்கியஸ்தர்கள் இந்தோனேஷியா செல்லவுள்ளோம்.

இம்மாநாட்டில் நீழ் வழங்கல் கட்டமைப்பில் இலங்கையின் நிதி நிலைபேண்தகு தன்மை தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

தற்போது 3.196 மில்லியன் மக்களுக்கு நீழ் வழங்கல் வடிகாலமைப்பு சபை நீர் வழங்குகிறது. இவர்கள் நீருக்கான கட்டணத்தையும் செலுத்துகின்றனர்.

எனினும் கிராம மட்டத்திலுள்ள மக்களுக்கு எமது அமைச்சின் கீழுள்ள திணைக்களத்தின் ஊடாகவே நீர் விநியோகிக்கப்படுகிறது.

நீர் வழங்கலை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இணைந்து ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.

கிளிநொச்சி மற்றும் மல்லாவியில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இன்று செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில் மேலும் பல வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.