இஸ்ரேல் எங்களை அச்சுறுத்தினால் அணுகுண்டு தயாரிப்போம்: ஈரான் தலைவரின் ஆலோசகர் சூசகம்

37 0

‘‘ஈரானுக்கு இஸ்ரேலால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு குண்டு தயாரிப்பதை தவிர வேறு வழியில்லை’’ என ஈரான் தலைவர் அயோதுல்லா அலி கமேனேவின் ஆலோசகர் கமல் கர்ராசி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தனர். ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ராணுவத்தினர் உதவி வந்தனர். இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் அமைந்துள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ராணுவத்தினர் தங்கியிருந்த கட்டிடம் மீது இஸ்ரேல் கடந்த மாதம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் சிலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடிாக இஸ்ரேல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குலை ஈரான் நடத்தியது. இவற்றை நடுவானிலேயே இஸ்ரேல் தடுத்து அழித்தது.

இந்நிலையில் ஈரான் நாட்டின் மதத் தலைவர் அயோதுல்லா ராயின் ஆலோசகர் கமல் கர்ராசி அளித்துள்ள பேட்டியில், ‘‘அணுகுண்டு தயாரிப்பது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் ஈரானுக்கு இஸ்ரேலால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்களின் ராணுவக் கொள்கையை மாற்றி அணு குண்டு தயாரிப்பதை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.

பத்வா பிறப்பித்திருந்தார்: அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு எதிராக ஈரான் தலைவர் அயோதுல்லா முன்பு ஒருமுறை ஃபத்வா பிறப்பித்திருந்தார். ஆனால், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அழுத்தம் ஏற்பட்டால், ஈரானின் அணு ஆயுதக் கொள்ளையை மறு ஆய்வு செய்வோம் என ஈரானின் அப்போதைய உளவுத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

ஈரானில் உள்ள ரகசிய இடத்தில் யுரேனியம் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பான சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) விசாரணைக்கு உதவுவதாக ஈரான் கடந்தாண்டு உறுதி அளித்தது. இதனால் ஈரான் அணுசக்தி அதிகாரிகளிடம், ஐஏஇஏ பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த விஷயத்தில் ஈரான் போதிய ஒத்துழைப்பு அளிக்காதது குறித்து கவலை தெரிவித்த ஐஏஇஏ தலைவர் ரபேல் கிராசி, ஈரானின் அணு ஆயுத நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.