முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன்………. கருத்தமர்வு – Berlin 03.05.2024

299 0

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்டநீதிக்கு ஒப்பானது எனும் மையப்பொருளுடன் கடந்த 03.05.2024 அன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் (Berlin) கருத்தமர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடைபெற்று கடந்த 15 ஆண்டுகளாக பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் எதுவுமின்றி, இன அழிப்பிற்கான நீதியும் மறுக்கப்பட்ட நிலையில், சிங்கள இனவாத அரசினால் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள் எனும் கோரிக்கைக்குப் பதிலாக ” எமக்கு நிகழ்ந்தது இன அழிப்புத்தான் என்பதனை வலியுறுத்துவதோடு, எம்மோடு இணைந்து எமக்கான நீதிக்குக் குரல் கொடுங்கள், எமது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவு வழங்குங்கள் ” எனும் நோக்குடன் இக்கருத்தமர்வு இடம்பெற்றது.

இக்கருத்தமர்வில் யேர்மன் அரசியற்கட்சி உறுப்பினர்கள், மனித உரிமைகள் அமைப்பினது உறுப்பினர்கள், செஞ்சுலுவைச்சங்கப் பிரதிநிதி, ஊடகவியலாளர்கள், குர்திஸ் மற்றும் பலஸ்தீன அமைப்பினது பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள்,மெடிக்கோ அமைப்பினர், யேர்மன் சேபுறுக்க (Seebrücke Germany),சூடான் நாட்டினர், இவர்களோடு ஈழத்தமிழ் அமைப்புகளும் கலந்துகொண்டன.
பிற்பகல் இரண்டுமணிக்கு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து ஈகைச்சடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தோடு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

நிகழ்வுகளின் தொடக்கத்தில் ” சுயநிர்ணய உரிமை “எனும் தலைப்பில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினர் தொடக்கவுரை வழங்கினர்.
தொடர்ந்து பேர்லின் நகரசபை உறுப்பினர் திரு. வெராற் கொச்சாக் (Ferat Kocak) அவர்கள் “இன அழிப்பிற்கான நீதி கிடைக்கும்வரை தமிழ்மக்கள் போராடவேண்டுமெனவும் அதற்கான முழு ஆதரவினை வழங்குவேன் ” எனவும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இறுதிநாள்களின் நேரடிச் சாட்சியங்களாக எழுத்தாளர் திரு.கவிமகன் மற்றும் பெண் ஒருவரதும் துயரம் நிறைந்த அனுபவப்பகிர்வுகள் அனைவரது மனங்களையும் உறையச்செய்தது. சிங்கள இனவெறி அரசினது திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கையினை நேரடிச்சாட்சியங்களது அனுபவப்பகிர்வுகள் உறுதிப்படுத்தியது.
அதேவேளை முள்ளிவாய்க்கால் இன அழிப்புத் தொடர்பான குறுங்காணொளி காண்பிக்கப்பட்டபின் சிங்கள ஊடகவியலாளர் திரு. பாஷ்னா அவர்களுடைய முள்ளிவாய்க்கால் இன அழிப்புத்தொடர்பான ஆய்வுரையும் இடம்பெற்றது.

சிறிய இடைவேளையினைத் தொடர்ந்து “தோல்வியுற்ற பரிகார நடவடிக்கைகள் ” தொடர்பாகத் தாயகத்திலிருந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், பாரளுமன்ற உறுப்பினருமாகிய திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டோர்களது உறவினர்கள் சார்பாக திருமதி சுயந்தா துசியந்தன் அவர்களும் இணையவழி ஊடாகக் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.

தனது கணவர் காணாமல் ஆக்கபட்டபின்
15 ஆண்டுகளாக அவரது அவலமும் துயரமும் நிறைந்த அனுபவப் பகிர்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது.
தொடர்ந்து கருத்தமர்வின் சிறப்பு நிகழ்வாக இன அழிப்பிற்கான பரிகாரமும், தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான தேவையும் எனும் தலைப்பில் திரு. S.அந்திறியாஸ் (Andreas), திரு. V.சிந்துஜன், திருமதி. லக்சி, திரு. சங்கர் ஆகியோரது ஆய்வரங்கம் நிகழ்ந்தது. மிகவும் நுணுக்கமான ஆய்வுகளும், அனுபவங்களும் நிறைந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டு, இன அழிப்பிற்கான பரிகார நீதிப்போராட்டத்தினை எவ்வாறு தொடரலாம் எனும் தேடலாக இவ் ஆய்வரங்கம் அமைந்திருந்தது.குறிப்பாக தேசியப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திய முதல்த்தலைமுறையினரை அங்கீகரிப்பதும் மதிப்பளிப்பதும் அவசியம் எனும் விடையம் உரையாடப்பட்டது. அத்தோடு தாயக அரசியல்மீது நாம் கவனம் செலுத்த முற்படுகையில் பல்வேறு சர்வதேச அமைப்புகளினால் எமது கவனம் திசைதிருப்பப்படுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மேலும் பல்வேறு அரசியல் ரீதியாகச் செயற்படும் அமைப்புகளோடு ஒன்றிணைந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுதலின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.ஒடுக்கப்படும் வேறு தேசிய இனமக்களுக்கு எமது ஆதரவினை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டது. நிறைவாக ஈழத்தமிழர்களது தாயகம் தமிழீழமே அன்றி சிறீலங்கா இல்லை என்பதனை தொடர்ந்து வலியுறத்தவேண்டும் என்ற கருத்து உறுதியாக முன்வைக்கப்பட்டது.

ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலுக்கான இடதுசாரிக்கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி. லேயா றைஸ்னர் (Lea Reißner) மற்றும் மற்றும் யேர்மன் சோசலிசக்கட்சியினது (SPD) இளையோர் அமைப்பின துணைத்தலைவர் திரு. தேவா ஆகியோரது சிறப்புரையும் இடம்பெற்றது. எமது இன அழிப்பு நீதி கோரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு தமது முழு ஆதரவினை வழங்குவதாக இருவரும் உறுதியளித்தார்கள்.

இதனையடுத்து ஈழத்தமிழர் மக்களவை, யேர்மன் இளையோர் அமைப்பு, யேர்மன் பெண்கள் அமைப்பு ஆகியன இணைந்து “முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன்……..எனும் கருத்தமர்வின் கோரிக்கையினை வாசித்தபின் வருகை தந்திருந்த அமைப்புகளில் இருந்து ஒன்பது அமைப்புகளின் பிரதிநிதிகள் “இணைந்து குரல் கொடுப்போம் “எனும் மையக்கருத்தோடு ஆதரவுரை வழங்கினார்கள்.
நிறைவாக யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்களது நிறைவுரையோடும் நன்றி பகிர்தலோடும் கருத்தமர்வு நிறைவடைந்தது.

இக்கருத்தமர்வின் கருத்துரைகள் அனைத்தும் தமிழ் ,யேர்மன் ஆகிய இருமொழிகளிலும் முழுமையாக வழங்கப்பட்டது.