களப்பரப்பின் கஞ்சி! – இரா.செம்பியன்.

71 0

களப்பரப்பின் கஞ்சி!
…………………….. ………..

மனிதகுல விடுதலைக்காய்ப்
போராடும் இனங்களிடையே
போர்வலு ஆயுதமாகப்
பொருளாதார இருப்பினையும்
வளங்களின் செழிப்பினையும்
அழிப்பதென்பது அரக்ககுண இயல்புதான்
எங்கள் வளங்களும் சூறையாடப்பட்டது..!
எங்கள் களஞ்சியங்கள் தீயிடப்பட்டது…
எங்கள் இருப்புக்கள் தீர்ந்தன….
போர்மூண்ட களப்பரப்பின்
உயிர்காக்கும் உணவாக
கஞ்சியே தஞ்சமானது..!
சுமார் மூன்றரை இலட்சம்
மக்களின் இயல்பு வாழ்வே மாறியது..!
உப்புக் காற்றையும்
சுட்டெரிக்கும் வெயிலையும் தாண்டி
குண்டுமழை நடுவே தரிக்கவிட்டு
உயிர் கலங்க உதிரம் வடிய
சதைக் குவியல்களாக்கி
நரபலியெடுத்துக் குருதி குடித்த
ஸ்ரீலங்காப் பேய்கள்
கஞ்சிக்காய் நின்ற எம்
பிஞ்சுகளையுமல்லவா கொன்று தின்றது..!
ஏந்திய பாத்திரம் குருதியில் நிறைய
தாங்கிய கரங்கள் தரையில்த் துடித்தன..!
பயங்கரவாதிகளாம் இந்தப்
பச்சிளம் பாலகர்கள்
சொன்னது ஸ்ரீலங்கா அரசு..!
வெந்து கருகிய உடல்களைப்
புதைத்து மீண்டும் நிமிர்ந்தன
களப்பரப்பெங்கிலும் உயிர்க் காப்பிலே
புதிய கஞ்சிக் கொட்டகைகள்.

– இரா.செம்பியன்