NEMIS இன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் கோபா குழுவின் கவனத்திற்கு

39 0

தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் முறைமையின் (NEMIS) தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தத் தகவல் முறைமை 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் எதிர்பார்த்த செயற்பாட்டு நிலைக்கு இதுவரை வரவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தக் குழுவில் 4 வருடங்களாக இந்தத் தகவல் முறைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும், அது இன்னும் எதிர்பார்த்த நிலையை அடைய முடியாமல் இருப்பது தொடர்பில் அதிருப்தியடைவதாக குழு அறிவித்தது.

விசேடமாக, பாடசாலைக் கட்டமைப்பு தொடர்பான தேவையான சரியான தகவல்கள் இந்தத் தகவல் முறைமையில் இல்லாமை தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். அத்துடன், கல்வி தொடர்பான தேசிய தகவல்கள் சரியாகப் பேணப்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கல்வி அமைச்சின் 2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் முறைமையின் (NEMIS) தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (24) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், 2008/37 ஆம் இலக்க சுற்றுநிருபத்துக்கு முரணாக கல்வி அமைச்சின் கட்டமைப்புக் குழு அனுமதியின்றி பாடசாலைகளில் வகுப்பு எண்ணிக்கைகளை மாற்ற முடியாத போதிலும், அமைச்சின் அனுமதியின்றி 29 பாடசாலைகளில் அதிபர்களின் விருப்பத்திற்கமைய இடைநிலை வகுப்புகளுக்கு புதிய வகுப்புகளை ஆரம்பித்துள்ளமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பான முழுமையான அறிக்கையை மே மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரை வழங்கினார்.

அத்துடன், முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதில் குறைபாடு உள்ளதா என்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் கடந்த 20 வருடங்களின் தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு வழங்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டது.

அத்துடன், 20222 ஜூன் 06 ஆம் திகதிய ED/1/6/1/10/2022ஆம் இலக்க தேசிய பாடசாலைப் பணிப்பாளரின் கடிதத்துக்கு அமைய நாட்டில் நிலவிய இக்கட்டான சூழ்நிலையில், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாக மாணவர்களை அவர்களது வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இது தொடர்பில் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் தோன்றியுள்ளதை சுட்டிக்காட்டிய குழு, இது தொடர்பில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி முடிவெடுக்குமாறு அதிகாரிகளுக்கு குழு பரிந்துரைத்தது.

மேலும், கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை என்பவற்றின் தற்போதைய நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான இசுறு தொடங்கொட, மதுர விதானகே, கலாநிதி ஹரிணி அமரசூரிய, முதிதா பிரிஸான்தி, மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.