தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு அரசாங்கத்தின் நாடகம்

35 0

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு பெருந்தோட்ட மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. அவ்வாறு அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தேவை இருக்குமாக இருந்தால் அரசாங்கம் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற  கடை,அலுவலக ஊழியர்(ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குப்படுத்தல்) (திருத்தச்) சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து  அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருக்கிறது. இது தொழிலாளர்களை ஏமாற்றும் நாடகமாகும். அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால், அவர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் செய்து  அதன் மூலம் அடிப்படை சம்பளத்தை 1700 ரூபாவாக மாற்றியமைத்திருக்க வேண்டும்.

மாறாக சம்பள அதிகரிப்பை வர்த்தமானி அறிவிப்பு செய்தால்இ நிச்சயமாக அதற்கு எதிராக தோட்ட கம்பனிகள் வழக்கு தொடுக்கும் என்பது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். சம்பள அதிகரிப்பு என்பது மே முதலாம் திகதி ஜனாதிபதியினால் அரங்கேற்றப்பட்ட நாடகமாகும். குறித்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக தோட்ட கம்பனிகள் நீதிமன்றம் செல்லும் என்பது ஜனாதிபதி, தொழில் அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். இதனை செயற்படுத்த முடியாது என்பதும் இவர்களுக்கு தெரியும்.

அதனால் தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு வர்த்தமானி அறிவிப்பு தோட்டத் தொழிலாளர்களை  பிழையாக வழிநடத்தி அவர்களை ஏமாற்றும் நடவடிக்கை.

அதேபோன்று இரவு நேர தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க கடை,அலுவலக ஊழியர்(ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குப்படுத்தல்) (திருத்தச்) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவதாக தெரிவித்து, தொழில் ஆணையாளருக்கு இருக்கும் அதிகாரத்தை அமைச்சருக்கு கீழ் கொண்டுவரும் நடவடிக்கையே இடம்பெறுகிறது. தொழில் செய்யும் பெண்களின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதில்லை.

தொழில் செய்யும் பெண்களுக்கு அந்த நிறுவனங்களில்  பாதுகாப்பை உறுதிப்படுத்தல். அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை செய்துவிட்டே இந்த சட்டத்தில் திருத்த மேற்கொண்டிருக்க வேண்டும். மாறாக பெண்கள் இரவு நேரத்தில் தொழில் செய்வது தொடர்பில் அமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் மூலம் பெண்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்றார்.