சம்பள அதிகரிப்பு வர்த்தமானி வெளியிட்டு தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்

84 0

தோட்டத் தொழிலாளர்களுக்கு உண்மையாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அது தொடர்பான சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு தோட்ட மக்களை ஏமாற்ற வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற  கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குப்படுத்தல்) (திருத்தச்) சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் தெரிவித்து விட்டு அதனை வழங்குவதற்கு 5வருடங்கள் சென்றன. அதேபோன்று தற்போது 1700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அமைச்சரும் ஜனாதிபதியும் மே தின நிகழ்வில் தெரிவித்திருந்தனர். அதனை நாங்கள் வரவேற்கிறோம். எங்களை பொருத்தவரை தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பளமும் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவும் வழங்குவதாக இருந்தால் அதனை வரவேற்கிறோம்.

அதேநேரம் தொழிலாளர்களின் சம்பனத்தை ஆயிரம் ரூபாவுக்கு மேல் அதிகரிக்க இணங்கப்போவதில்லை என முதலாளிமார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 1200 ரூபா சம்பள அதிகரிப்புக்கு  இணக்கம் தெரிவித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அப்படியானால்  ஏன் 1700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அறிவிப்பு செய்தீர்கள். முதலாளிமார் சம்மேளனத்துடன் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடி ஒரு தீர்மானத்துக்கு வந்த பின்னர் இதனை அறிவிப்பு செய்திருக்க முடியும்.

அவ்வாறு இல்லாமல் மே தினத்தை பயன்படுத்திக்கொண்டு இவ்வாறான அறிவிப்போன்றை செய்வது பொருத்தம் இல்லை. நான் 30 வருடங்களாக அந்த மக்களுடன் இருந்து வருகிறவன். அதனால் அந்த மக்களின் கஷ்டம் எங்களுக்கு தெரியும்.  இவ்வாறு சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அது தொடர்பான சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம். மாறாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு தோட்ட மக்களை ஏமாற்ற வேண்டாம்.

அத்துடன் இரத்தினபுரி தும்பர தோட்டத்தில் கணகா என்ற பெண் தொழிலாளியை தோட்ட கண்காணி, மேற்பார்வையாளர் மற்றும் ஒருவர் தாக்கியுள்ளனர். வேலைக்கு ஏன் வரவில்லை என்று கேட்டே இவர்கள் மூவரும் அவரை தாக்கியுள்ளனர். இது முற்றாக சட்டவிராேத நடவடிக்கை. அதனால் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.