நானுஓயா ரதல்ல வீதியில் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

38 0

நுவரெலியா- தலவாக்கலை வீதியின் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் இருபுறமும் போடப்பட்டுள்ள பாதுகாப்பு இரும்பு வேலி பல இடங்களில் சேதமடைந்துள்ளதாக  வீதியை பயன்படுத்தும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம் செங்குத்தான சரிவு கொண்ட இந்த வீதி பகுதியில் வாகன விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், பாதுகாப்பு வீதி இரும்பு வேலி இருப்பதால் பல விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வீதியில் அடிக்கடி ஏற்படும் வீதி விபத்துகளால் சுமார் ஒரு வருடமாக பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்த வீதியில் விபத்துகள் இடம் பெறுவதால் பல இடங்களில் பாதுகாப்புக்காக மண்  மூடைகள் வைக்கப்பட்டு அவையும் சேதமடைந்துள்ளதாகவும் வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இவ் வீதியை முறையாக செப்பனிட வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன் வர வேண்டும் என அப் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன சாரதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது இவ்வாறிக்க அடிக்கடி  விபத்துக்கள் ஏற்படுவதால் இவ்வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு நுவரெலியா மாவட்ட செயலகம் தடை விதித்திருந்தது. இந்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்வதற்காக நானுஓயா பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தனர்.

 

ஒரு சில நேரங்களில் பொலிஸார் கடமையில் இல்லாத வேளையில் தனியார் பேருந்துகள் மற்றும் பார ஊந்துகள் இக் குறுக்கு பாதையில் போக்குவரத்தில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் மீண்டும் விபத்துக்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தால் இவ் வீதிளில் கனரக வாகனங்கள் செல்வதை முற்றாக தடை செய்ய வேண்டும் என இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.