நுவரெலியாவில் வரட்சி ; மவுசாக்கலை நீர்த்தேக்கம் நீர்மட்டம் குறைந்தது

35 0

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாடான நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவுகின்றது. இதனால் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சிற்றாறுகள், ஓடைகள் மற்றும் அருவிகள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் வீழ்ச்சிகள் வரண்ட நிலையில் உள்ளது. இதனால் நீர் மின் உற்பத்தி பாதிக்கும் என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 52 அடி குறைந்து உள்ளது. அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 47 அடி குறைந்து உள்ளது.

மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட பாலம், சண்முக நாதர் ஆலயம், இஸ்லாமிய பள்ளியில் இருந்த தூபி, பௌத்த மத விகாரை, அதன் முற்றத்தில் இருந்த போதி மரம், கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பனவற்றை தற்போது மக்கள் அதிக அளவில் பார்க்க சென்று வருவதை காண கூடியதாக இருக்கின்றது.

தற்போது இப்பகுதியில் கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக நீர் மட்டம் குறைந்துள்ளதால் காலை மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக இப் பகுதிக்கு படை எடுத்து செல்கின்றனர். மலையக பகுதிகளில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருக்கின்றது.

அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் வரட்சியின் காரணமாக பல இடங்களிலுள்ள காடுகளை இனம் தெரியாத நாசக்காரர்கள் தீ வைக்கின்றனர். இதனால் வரட்சி மேலும் அதிகரிக்கின்றது. இவ்வாறு காடுகளுக்கு தீ மூட்டுபவர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் ஒத்துழைபை வழங்கும்படி பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.