இலங்கை உள்ளடங்கலாக உலகெங்கிலும் பரந்துபட்டு வாழும் புலம்பெயர் இந்தியர்களே இந்திய தேசத்தின் மிகமுக்கிய தூதுவர்களாவர். இன்றளவிலே உலகளாவிய ரீதியில் இந்தியா குறித்துக் கட்டியெழுப்பப்பட்டுள்ள பிம்பமானது உங்களது (புலம்பெயர் இந்தியர்கள்) செயற்பாடுகளையே அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கின்றது. அதேவேளை புலம்பெயர் இந்தியர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதில் இந்திய அரசாங்கம் அரசியல் ரீதியான தன்முனைப்பைக் கொண்டிருக்கின்றது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட சந்தோஷ் ஜாவை கௌரவிக்கும் வகையில் ‘கோபியோ’ அமைப்பினால் திங்கட்கிழமை (6) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;
2004 ஆம் ஆண்டு நான் நியூயோர்க்கில் இருந்தபோது முதன்முறையாக ‘கோபியோ’ அமைப்பு தொடர்பில் கேள்வியுற்றேன். இருப்பினும் பின்னாளில் ‘கோபியோ’ அமைப்பு இலங்கையிலும் நிறுவப்பட்டு, தற்போது அதன் வலுவான செயற்பாடுகளை என்னால் பார்க்கமுடிகின்றது.
நீங்களே இந்தியாவின் மிகமுக்கிய தூதுவர்கள். இன்றளவிலே உலகளாவிய ரீதியில் இந்தியா குறித்துக் கட்டியெழுப்பப்பட்டுள்ள பிம்பமானது நானோ அல்லது எமது உயர்ஸ்தானிகராலயமோ செய்வதைக் காட்டிலும் பன்மடங்காக உங்களது செயற்பாடுகளையே அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கின்றது. இதன் பிரதிபலிப்பு கடந்த பல வருடங்களாக எமது கொள்கைகளிலும், செயற்பாடுகளிலும் வெளிப்பட்டிருக்கின்றது.
இந்தியா மிகப்பரந்துபட்ட எண்ணிக்கையிலான புலம்பெயர் இந்தியர்களைக் கொண்டிருப்பதில் பெருமிதமடைகின்றது. உலகளாவிய ரீதியில் 200 நாடுகளில் சுமார் 32 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றார்கள். இது எமது (இந்தியாவின்) வலுவாக்கத்துக்கான உந்துதலாக அமைந்திருக்கின்றது. புலம்பெயர் இந்தியர்களின் பங்களிப்பின் மூலம் நாம் பல்வேறு நாடுகளுடனான எமது தொடர்புகளை வலுப்படுத்தியிருக்கின்றோம்.
நாம் கடந்த 20 வருடங்களில், அதிலும் குறிப்பாக கடந்த 10 வருடங்களில் புலம்பெயர் இந்தியர்களுக்காக, புலம்பெயர் இந்தியர்களுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றவேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்றோம். புலம்பெயர் இந்தியர்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையிலும், செயன்முறைகளை இலகுபடுத்தும் விதமாகவும் நாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் இவ்விடயத்தில் நாம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பை நன்கு புலப்படுத்தும்.
புலம்பெயர் நாடுகளில் இந்தியர் ஒருவர் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கும்போது, அவரால் உறங்கமுடியாதபோது அந்நாடுகளில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அல்லது தூதுவரினால் உறங்கமுடியாது. மாறாக அப்பிரச்சினைக்குரிய தீர்வையோ அல்லது மாற்றுவழியையோ கண்டடையவேண்டும். அதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை நாம் கொண்டிருக்கின்றோம்.
அதேபோன்று வெளிவிவகார அமைச்சின்கீழான வெளிவிவகாரக்குழுவின் தெரிவில் குமார் நடேசன், மனோ செல்வநாதன் ஆகியோர் இந்தியாவின் ‘பிரவாசி பாரதிய சம்மன்’ விருதினைப் பெற்றனர். இந்தியாவையும், புலம்பெயர் இந்தியர்களையும் இணைப்பதே இதன் நோக்கமாகும். அதுமாத்திரமன்றி இத்தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் நீண்டகாலமாக பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றோம். அவற்றைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஊக்குவிப்பை அளிக்குமாறும், இத்திட்டங்களின் ஊடாக உங்களது அடுத்த தலைமுறையினர் பயனடைவதை உறுதிப்படுத்துமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் கடந்த 5 – 10 வருடங்களாக புலம்பெயர் இந்தியர்களை வலுவூட்டும் வகையிலான பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. உதாரணமாக கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவலின்போது சுமார் 22,000 மாணவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கென ‘வந்தே பாரத்’ செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதற்காக சுமார் 10 நாட்களாக 97 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அடுத்ததாக புலம்பெயர் இந்தியர்களின் பாரம்பரிய கலாசார முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘புலம்பெயர் நலன் நிதி’ பேணப்பட்டுவருகின்றது. புலம்பெயர் இந்தியர்களின் பிள்ளைகளுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம் நடைமுறையில் இருக்கின்றது.
அடுத்ததாக இலங்கையர்களுக்கான இலத்திரனியல் விசா செயன்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இதுகுறித்து இந்திய வம்சாவளியினருக்கு மாத்திரமன்றி, அனைத்து இலங்கையர்களுக்கும் தெளிவூட்டுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.