முதலமைச்சரை சந்தித்த யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதி

250 0

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமை ஏற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்.கோவில் வீதியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ்சேனநாயக்க பதவி உயர்வு பெற்று சென்றதை தொடர்ந்து புதிய கட்டளை தளபதியாக ஹெட்டியாராச்சி நியமிக் கப்பட்டிருக்கின்றார்.இந்த நிலையில் தமது பதவியேற்பை தொடர்ந்து முதலமைச்சரை சிநேகபூர்வமாக அவர் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கட்டளை தளபதியுடன் பல நல்ல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார். இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் , தான் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் கடமையாற்றியபோது இங்கிருந்த நிலமைகளுக்கும் இப்போதுள்ள நிலமை களுக்கும் வித்தியாசம் உள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல் 2012ஆம் ஆண்டு இருந்த கட்டடங்கள் இப்போது இடிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன் அவ்வாறு இடித்திருக்கவேண்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.இதேவேளை, மீள்குடியேற்றத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அதில் தாமதங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக செய்யப்படும் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.