வருமான வரி சோதனையில் ரூ.5.5 கோடி சிக்கிய விவகாரம்

290 0

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.5.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு கிடுக்கிபிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ரத்து செய்தது. வாக்காளர்களுக்கு பணம் வழங்க முழுக்க, முழுக்க அமைச்சர் விஜயபாஸ்கர் தான் காரணம். அவர் மூலமாக தான் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் நடைபெற்றது என்பது வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.5.5 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி அளவில் பணம் வினியோகம் செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்ைடயன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மற்றும் வைத்திலிங்கம் எம்பி மூலமாக எவ்வளவு பணம் வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டது என்ற முழு விவரம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. நேற்று முன்தினம் வருமான வரித்துறை முன்பு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல்வேறு ஆவணங்களை கையில் வைத்து கொண்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பூக்கடை பகுதியில் தங்கியிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர்கள் அறையில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையும் நடத்தினர்.

அதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அமைச்சர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்த வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.இந்த நிலையில் விஜயபாஸ்கர் வழக்கை 2 விதமாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அதாவது, பண வினியோகம் குறித்து ஒரு விசாரணையும், மற்றொன்று ரூ.5.5 கோடி பணம் பறிமுதல் செய்தது குறித்தும் தனித்தனியாக பிரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், பிரதமர் மோடியின் உத்தரவுப்படி ஒரு தனி நபர் ரூ.2 லட்சத்துக்கு மேல் கையில் ரொக்கம் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் வருமான வரித்துறைக்கு தெரிவித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிபிஐ அல்லது அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அப்படித்தான் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியையும் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

அதேபோல, பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை விசாரிக்க வருமான வரித்துறை பரிந்துரை செய்துள்ளது. இதற்கான கடிதத்தை சி.பி.ஐ., அமலாக்க துறைக்கு வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. விரைவில் அவர்கள் அமைச்சர் உள்பட பலரிடம் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. முதல் கட்டமாக 2 லட்சத்துக்கும் மேல் ரொக்க பணம் வைத்திருந்ததாக சி.பி.ஐ., அமலாக்க துறை வழக்கு பதிவு செய்ய உள்ளது. அமலாக்கப்பிரிவு முதல் கட்டமாக தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இதனால், அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் அமைச்சர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர். விஜயபாஸ்கர் கைது செய்யப்படும் பட்சத்தில் அவரது அமைச்சர் பதவி காலியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு சஸ்பெண்ட்? மத்திய அரசு பரிசீலனை

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஆர்.கே.நகருக்கு ரூ.89.65 கோடி பணம் விநியோகம் குறித்த ஆவணங்கள் சிக்கின. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 7 அமைச்சர்கள், ஒரு எம்பி ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளன. இந்த பணம் விநியோகம் குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1996ம் ஆண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போது முழு மெஜாரிட்டியுடன் அதிமுக அரசு இருந்தது. ஆனால் தற்போது ஆட்சியை தக்க வைப்பதற்காக கூவத்தூரில் எம்எல்ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

அமைச்சர்கள் துணையுடன் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொடர்ந்து தமிழக அரசு மீது ஏராளமான புகார்கள் எழுந்துள்ளதால், அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. இதனால் தமிழக அரசை சஸ்பெண்ட் செய்யலாமா? என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக நேற்று முன்தினம் இரவு தகவல்கள் வெளியாகி அதிகாரிகள் மத்தியிலும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.5 லட்சம் விவகாரம் மருத்துவர் விளக்கம்

அரசு மருத்துவர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் உதவியாளர்கள் மூலம் ₹5 லட்சம் அளித்தார். அதை நான் ஓட்டல் பில்லுக்கு செலுத்தினேன் என்று கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இவை அடிப்படை ஆதாரமற்ற செய்தி. நான் எந்த பத்திரிகைக்கும், ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கவில்லை. நான் கட்டணமாகவோ அல்லது வேறு எதற்காகவே எந்த பணத்தையும் பெறவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.