‘சம்பவமொன்றை செய்தி அறிக்கையிடச் செல்லும் ஊடகவியலாளர் ஒருவர், அச்செய்தியே தனது குடும்பத்தைப் பற்றியது தான் என்பதை அறிந்துகொள்ளும் தருணம் மிகக்கடினமானதாகும்’
இஸ்ரேல் – காஸா மோதலை தொடர்ச்சியாக அறிக்கையிட்டுவந்த அல் ஜஸீரா சர்வதேச செய்திச்சேவையின் உள்ளூர் முகவரகத் தலைவரும், பலஸ்தீன ஊடகவியலாளருமான வயேல் அல்-டாடோவின் மனைவியும், மூன்று பிள்ளைகளும் பேரப்பிள்ளையும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள்.
தனது குடும்ப உறுப்பினர்களின் இழப்பு குறித்து அல் ஜஸீரா செய்திச்சேவையிடம் தழுதழுக்கும் குரலில் பேசிய 53 வயதான ஊடகவியலாளர் வயேல் அல்-டாடோ கூறியவையே மேற்தரப்பட்ட வசனங்கள். ஆனால், அப்பேரிழப்பின் பின்னரும் உண்மையை உலகுக்குச் சொல்லும் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் அவர், கடந்த ஆண்டு ஊடகவியலாளர்களின் மீளெழுச்சிக்கான அடையாளமாக மாறியிருந்தார்.
நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் (Committee to Protect Journalists) அண்மைய தரவுகளின்படி, இஸ்ரேல் – காஸா மோதல் ஆரம்பமான கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து தற்போது வரை (மே 1) கொல்லப்பட்ட சுமார் 35,000க்கும் மேற்பட்டோரில் குறைந்தபட்சம் 97 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உள்ளடங்குவதாக அறியமுடிகிறது.
எனவே உலகெங்கிலும் ஊடக சுதந்திரமும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையிலேயே இன்றைய தினம் (மே 3) ‘பூகோளத்துக்கான ஊடகம்: சூழலியல் நெருக்கடிக்கு மத்தியில் ஊடகவியல்’ (A Press for the Planet: Journalism in the face of the Environmental Crisis) எனும் தொனிப்பொருளில் ‘உலக ஊடக சுதந்திர தினம்’ (World Press Freedom Day) அனுட்டிக்கப்படுகிறது.
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் மற்றும் ஊடகப்பணியின்போது உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவுகூரல் ஆகிய நோக்கங்களுக்காக 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பின் பரிந்துரையின் பேரில் 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் மே மாதம் 3ஆம் திகதி ‘உலக ஊடக சுதந்திர தினமாக’ பிரகடனப்படுத்தப்பட்டது. அதிலிருந்து வருடாந்தம் அனுட்டிக்கப்படும் இத்தினத்தில் உண்மைகளை வெளிக்கொணர்வதற்காக ஊடகவியலாளர்கள் முகங்கொடுக்கும் சவால்கள், ஊடகப்பணியை முன்னெடுப்பதற்கான ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதிசெய்தல், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
எனினும், உலகளாவிய ரீதியில் முழுமையான ஊடக சுதந்திரம் என்பது தனியொரு தினத்தில் பேசும் விடயமாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, அது நடைமுறையில் முழுமையடையவில்லை என்பதையே இக்கட்டுரையின் தொடக்கத்தில் பகிரப்பட்டதை ஒத்த பற்பல சம்பவங்கள் காண்பிக்கின்றன.
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் (Reporters without Boarders) 2023ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர குறிகாட்டியின்படி, 180 நாடுகளின் வரிசையில் இலங்கை 45.85 புள்ளிகளுடன் 135ஆவது இடத்தில் இருக்கிறது. இது ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் இலங்கை மிகப் பின்னடைவான நிலையில் இருப்பதையே காண்பிக்கிறது.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு அடக்குமுறை சம்பவங்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை எனவும், இலங்கையில் ஊடகத்துறை அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.
அதேபோன்று காலநிலை மாற்ற சவால்கள் தொடர்பில் உலகத்தின் கவனம் திரும்பியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இம்முறை ஊடக சுதந்திர தின தொனிப்பொருளின் பிரகாரம், சூழலியல் நெருக்கடிகளை ஊடகங்கள் கையாளும் விதம், சூழலியல் நெருக்கடிகளால் ஊடகத்துறை முகங்கொடுத்திருக்கும் சவால்கள் மற்றும் அந்நெருக்கடிகளை தணிப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு என்பன பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளது. இது பற்றிய ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இன்று மாத்திரமன்றி, இனிவரும் காலங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதன் ஊடாக சூழலியல் நெருக்கடிகள் சார்ந்த ஊடக அறிக்கையிடலின் தரத்தை மேம்படுத்த முடியும்.
அதேவேளை ‘ஊடகப்பணி என்பது குற்றமல்ல’ (Journalism is not a crime) எனும் வாசகத்தின் தீவிரத்தையும் பின்னணியையும் இலங்கை உள்ளடங்கலாக உலக நாடுகளின் அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் பொதுமக்களும் இன்னபிற சகல தரப்பினரும் புரிந்து ஏற்பதன் ஊடாகவே சாமானிய மக்களின் நலன்களை முன்னிறுத்தி உண்மைகளை உரக்கச்சொல்லும் உயர் ஊடகப்பணியை சரிவுறாது காக்க இயலும்!