ஏப்ரலில் பணவீக்கம் 1.5 சதவீதமாக உயர்வு

48 0

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது.

அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஏப்ரலில் 2.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததுடன், மார்ச்சில் 0.5 சதவீதம் எனும் குறிப்பிடத்தக்களவிலான சுருக்கத்தைப் பதிவுசெய்த உணவல்லாப்பணவீக்கம் ஏப்ரலில் 0.9 சதவீதமாக அதிகரித்தது.

மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் ஏப்ரலில் -0.79 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 0.32 சதவீத வீழ்ச்சியும், உணவல்லாப்பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட 0.47 சதவீத வீழ்ச்சியும் காரணமாக அமைந்துள்ளன.

அதேவேளை பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் பதிவான 3.1 சதவீதத்திலிருந்து ஏப்ரலில் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது இவ்வாறிருக்க பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடையுமென மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.