இன, மத கலவரத்தை தடுத்த பேராயர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம்

56 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படவிருந்த இன, மத கலவரத்தை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார். எனவே அவர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் 3 நாட்கள் விவாதங்கள் இடம்பெற்றன. இதன் போது நாம் ஆதரங்களுடன் 4 காரணிகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தோம்.

தாக்குதல்கள் தொடர்பில் தெரிந்திருந்தும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பிலும், தாக்குதல்கள்தாரிகளுக்கு உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியவர்கள் தொடர்பிலும், விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பிலும் பல்வேறு காரணிகளை நாம் முன்வைத்திருந்தோம்.

பாராளுமன்றத்தில் சாமர சம்பத் தசநாயக்க பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை கடுமையாக விமர்ச்சித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படவிருந்த இன, மத கலவரத்தை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை அமைதியாக நல்வழிப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்கல்களை தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். தொடர்ச்சியாக அவர் இவ்வாறு கிருஸ்தவத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை அனுமதிக்க முடியாது.

மே தினத்துக்காக நாம் கோரிய இடத்தை வழங்காமல் அரசாங்கம் சதி செய்தாலும், நாம் வெற்றிகரமாக கூட்டத்தை நிறைவு செய்தோம். நாம் கோரிய இடத்தையே ஜே.வி.பி.க்கு வழங்கினர்.

காலி முகத்திடலையும் கோரினோம். எனினும் காலி முகத்திடல் எந்த கட்சிக்கும் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. அடுத்த வருடம் நிச்சயம் அரசாங்கமாக மே தினக் கூட்டத்தை கொண்டாடுவோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சீ.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எனவே இதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விலகியிருக்க முடியாது என்றார்.