தொழில் ஆணையாளரின் வர்த்தமானி முன்மொழிவுகளுக்கு காலக்கெடுவுக்குள் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும்

37 0

தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் அதிகரிப்பு குறித்து தொழில் ஆணையாளரினால் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ள முன்மொழிவுகளுக்கு ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2382/04இன்படி,  தேயிலை உற்பத்தி மற்றும் உற்பத்தி வர்த்தகம், இறப்பர் மற்றும் பதனிடப்படாத இறப்பர் உற்பத்தி வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது.

இது குறித்து ஊடகங்கள் மூலம் பரவலான செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும், மே 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொட்டகலையில் இடம்பெற்ற கூட்டத்திலும், ஜனாதிபதி இதை வலியுறுத்தினார்.

நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் கூற்று தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் அதன் உறுப்பினர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் 30, 2024 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தேயிலைச் செய்கை மற்றும் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்துள்ளார். இந்த முடிவு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மே 15, 2024 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கவும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவும் இந்த அறிவிப்புகள் மூலம் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 2024 மே 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சில ஊடகங்கள் அறிக்கையிடுவது தவறானதாகும். உத்தேச புதிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதற்கான திகதி அல்லது அதிகரிக்கப்பட்ட சம்பளத்தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அவ்வாறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என சம்மேளனம் தெரிவித்துக்கொள்கின்றது.

தொழிலாளர் ஆணையாளரால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்த முன்மொழிவுகளுக்கு ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யும் என்பதை இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உறுதிப்படுத்துகின்றது.

வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக அரச அதிகாரிகளின் அறிக்கைகளும் ஊடகங்கள் அதை தவறாக கையாளும் விதமும் சம்பள அதிகரிப்பு குறித்து, தொழிலாளர்கள் மத்தியில் தேவையற்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என சம்மேளனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.