கொல்லப்பட்டு 19 வருடங்களாகியும் நீதி கிடைக்காத சிவராமுக்கு வடக்கு, கிழக்கில் அஞ்சலி

68 0

லைநகரில் கடத்தப்பட்டு கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயத்தில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படாத நிலையில், அவரது 19ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கின் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் ஊடக அமையம், வவுனியா ஊடக அமையம், மட்டக்களப்பு ஊடக அமையம், அதே போல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடி வவுனியாவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் போராட்டக் களத்திலும், பம்பலப்பிட்டி பொலிஸுக்கு அருகில் ஏப்ரல் 28, 2005 அன்று சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சியின்போது, வேனில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட ‘தராகி’ என அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் நினைவுகூரப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியில் தர்மரத்தினம் சிவராமின் புகைப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தின.

தென்னிலங்கை ஊடகங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மௌனம் காப்பதாக, கொழும்பில் இருந்து நினைவேந்தல் நிகழ்வுக்காக மட்டக்களப்பு சென்றிருந்த ஊடகவியலாளர் பெடி கமகே தமிழ் ஊடகங்களுக்குத் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) தெரிவித்தார்.

“குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தென்னிலங்கை மௌனம் காக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. தெற்கில் உள்ள ஊடகங்கள் அமைதியாக இருக்கின்றன. தெற்கில் உள்ள அரசியல் குழுக்கள் மௌனமாக இருக்கின்றன.”

ஆட்சிக்கு வரக் காத்திருக்கும் எதிர்க்கட்சி அதிகாரக் குழுக்களைச் சுற்றி முன்னாள் இராணுவத் தளபதிகள் ஒன்றுசேர்வதில் அந்த அரசியல் சக்திகளால் நீதி கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்ப முடியாத நிலையில் தொடர்ந்தும் போராட வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

“இதைவிட ஆபத்தான சூழ்நிலை உள்ளது. ஏனெனில், ஆட்சிக்கு வரக் காத்திருக்கும் எதிர்க்கட்சி அதிகாரக் குழுக்களும் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதில்லை. அது மாத்திரமன்றி, இன்று அந்தப் படைகள் முன்னாள் இராணுவத் தளபதிகளால் நிரம்பியுள்ளன.”

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதற்கு எந்த அரசாங்கமும் தயாரில்லை என குற்றஞ்சாட்டினார்.

“இந்த நாட்டில் நாங்கள் நீதியை கேட்கின்றோம். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை கேட்கின்றோம். அதேபோன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வருடக் கணக்காக நீதியை கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அதேபோன்று வடக்கு, கிழக்கில் அழிக்கப்பட்ட, கொல்லப்பட்ட அனைவருக்கும் நாம் ஒரு நிவாரணத்தை கேட்கின்றோம். ஆனால், மாறி மாறி நாட்டை ஆளும் அரசாங்கங்கள் அந்த நீதியை கொடுப்பதற்கு தயாராக இல்லை” என்றார்.

பிரதியீடு இல்லை

யாழ்ப்பாணம் ஊடக அமையம் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி சனிக்கிழமையன்று ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் ஸ்டன்லி வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ராஜீவர்மனையும் நினைவு கூர்ந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஊடக அமையத்தின் ரட்ணம் தயாபரன், தர்மரத்தினம் சிவராம் கொல்லப்பட்டு பத்தொன்பது வருடங்கள் கடந்துள்ள போதிலும், அவருக்கு நிகரான எவரும் இதுவரை கிடைக்கவில்லை குறிப்பிட்டார்.

“மக்களுக்கு தேசியம் சார்ந்து செயற்பட்ட 39 ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களை இழந்துள்ளோம். சிவராம் படுகொலை செய்யப்பட்டு 19 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், அவருக்கான பிரதியீடு என்பது இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. உண்மையில் தியாகங்கள் போற்றப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும். நினைவுகூரப்பட வேண்டும். அதனூடாகத்தான் அடுத்த சந்ததிக்கு வரலாற்றை சொல்ல முடியும்.”

வவுனியா ஊடக அமையத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் நினைவுகூரப்பட்டதோடு, வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடி வவுனியாவில் 2,600 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் போராட்ட களத்திலும் சிவராம் நினைவுகூரப்பட்டார்.

44 ஊடகவியலாளர்கள்

இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (JDS) தொகுத்துள்ள அறிக்கைக்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் நாட்டில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வடக்கைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள். அவர்களில் எவருக்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை.

பாதுகாப்புடனான கொலை

1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த தர்மரத்தினம் சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளை வேனில் வந்த நால்வரினால் கடத்தப்பட்டார்.

சிவராமின் படுகொலை செய்யப்பட்ட சடலம் மறுநாள் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் சித்திரவதை செய்யப்பட்டு தலையில் சுடப்பட்டிருந்தார்.

1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சாவின் வழிகாட்டுதலின் கீழ் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த சிவராம் படுகொலை செய்யப்பட்ட போது பிரபல தமிழ்நெட் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியராக இருந்தார்.

1997ஆம் ஆண்டு தமிழ் நெட் இணையத்தளம் ஆரம்பிக்கப்படும் வரை சிவராம் தி ஐலண்ட், சண்டே டைம்ஸ், டெய்லி மிரர், வீரகேசரி மற்றும் தமிழ் டைம்ஸ் ஆகியவற்றில் சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றினார்.

தராகி

1989இல், தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காமினி வீரகோன், அரசியல் ஆய்வாளரைத் தேடியபோது ரிச்சர்ட் டி சொய்சா சிவராமை அறிமுகப்படுத்தினார்.

காமினி வீரகோன் சிவராமுக்குச் சூட்டிய பெயர் ‘தாரக’. ஆனால், செய்தி திருத்தத்தின்போது ஏற்பட்ட பிழை காரணமாக ‘தராகி’ என பெயர் அச்சிடப்பட்டது. பிழைகளுடன் வெளியிடப்பட்ட அந்தப் பெயரை சிவராம் தான் இறக்கும் வரை புனைபெயராக பயன்படுத்தி வந்தார் என்று சொல்லப்படுகிறது.