சென்னை மாநகராட்சியில் 30 நாட்களில் சொத்து வரி ரூ.382 கோடி வசூல்: 5 லட்சம் பேர் ஊக்கத்தொகை பெற்றனர்

69 0

சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 59 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்கும்.

மாநகராட்சியில் உள்ள சொத்துஉரிமையாளர்கள், ஏப்ரல் மாதம்30-ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி மற்றும் அக்டோபர் மாதம் 30-ம் தேதிக்குள் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்த வேண்டும்.

இந்த காலகட்டத்துக்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் சொத்துவரியில் 5 சதவீதம், அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். நடப்பு அரையாண்டுக்குப் பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு ஒவ்வொரு மாதத்துக்கும்ஒரு சதவீதம் தனிவட்டி அபராதமாகவிதிக்கப்படும்.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த ஏப்.1 முதல் 30-ம்தேதி வரை ரூ.382 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்.

கடந்த 30 நாட்களில் 5 லட்சத்து 22 ஆயிரம் பேர் காலத்தோடு சொத்து வரியைச் செலுத்தி 5 சதவீத தள்ளுபடியைப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சொத்துவரி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் செலுத்தப்படும் சொத்து வரிக்கு தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது. செப்.30-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.