கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை கல்வி துறையுடன் இணைப்பதா? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

45 0

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் பல்லாண்டு காலமாக 298 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) நிர்வாகத்தின்கீழ் இயங்கி வந்த கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுடனான விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரிகளுக்கு மாற்றி திமுக அரசு 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, கடந்த2023-24 ஆண்டு பட்ஜெட்டில் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அரசுகூட்டியதாக தகவல்கள் வருகின்றன. இது, இந்தப் பள்ளிகளை தொடங்கியதற்கான நோக்கத்தையே சிதைக்கும். இது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, இப்பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டும்.