நாட்டுக்குத் தேவையாக இருப்பது தொழிற்சாலைகளே தவிர, ஆக்கிரமிப்பு விஹாரைகளல்ல

45 0

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பின்னும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு எந்த முயற்சிகளும் உருப்படியாக முன்னெடுக்கப்படவில்லை. பதிலாக இனமுரண்பாட்டை வளர்க்கும் விதமாக நில ஆக்கிரமிப்பு, பௌத்த விரிவாக்கத்துக்காக விஹாரைகளைக் கட்டுதல் என்றே அரசாங்கம் செயற்படுகிறது.

இந்த நாட்டுக்குத் தேவையாக இருப்பது தொழிற்சாலைகளே தவிர, ஆக்கிரமிப்பு விஹாரைகளல்ல. வேலை வாய்ப்பில்லாமல் இளைய தலைமுறையினர் தவிக்கின்றனர். உற்பத்தியில்லாமல், பொருளாதார வளர்ச்சியில்லாமல் நாடு கடனில் மூழ்குகிறது. எனச் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தனது மே தின உரையில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்ற சமத்துவக் கட்சியின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

இடர் நிறைந்த வரலாற்றுத் தருணத்திலேயே இந்த மே நாளும் வந்திருக்கிறது இன ஒடுக்குமுறையும் பொருளாதாரப் பிரச்சினையும் இணைந்து இரட்டைத்தாக்குதலை நம்மீது மோசமாக நடத்துகிறது.  இரண்டையும் முறியடித்து விடுதலையடைய வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

இனப்பிரச்சினைக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்கும் தீர்வைக் காண  வேண்டிய அரசும் ஆட்சியாளர்களும் அதை வைத்தே பிழைத்துக் கொண்டிருக்கும் போக்கே தொடருகிறது. அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்வோரும் மறைமுகமாக இனவாதத்துக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஒத்துழைக்கிறார்கள். ஆகவே இரண்டு தரப்பும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றன. இவற்றை நாம் முறியடிக்க வேண்டும். அதற்காக விழிப்படைய வேண்டும். ஒன்றிணைந்து பலமடைய வேண்டும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் தினமும் ஆயிரக்கணக்கில் ஆற்றலுடையோர் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இதனால் உழைப்புச் சக்தியும் அறிவாற்றலும் நிறைந்த மனித வளம்  நாட்டை விட்டுச் செல்கிறது. அந்த வளத்தை அப்படியே பிற நாடுகள் பெற்றுக் கொள்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால், மேலும் நமது நாடு பின்னடையும். உடலிலிருந்து குருதி வடிந்தோடித் தீர்ந்து விட்டால் உயிராபத்தைச் சந்திக்க வேண்டியிருப்பதைப்போலவே இந்த மனித வள இழப்பு நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்தை விளைக்கக் கூடியது. ஆனால், இனவாதிகள் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கத் தயாரில்லை.

இன்று நாட்டின் வளங்களையெல்லாம் அந்நிய சக்திகள் கொள்ளையடிக்க முற்படுகின்றன. ஒவ்வொரு பிரதேசங்களிலும் வளக் கொள்ளைக்கு அரசாங்கமே துணைநிற்கிறது. அரசாங்கத்தோடு இணைந்து நிற்கும் சக்திகள் மக்களுக்கு விரோதமான முறையில் வளக்கொள்ளைக்குத் துணைபோகின்றன. அனைத்து நெருக்கடிகளுக்கும் மத்தியில் வாழ்கின்ற மக்களே இதற்கும் எதிராகப் போராட வேண்டியுள்ளது.

உழைப்பாளர்களுடைய உரிமைக் குரலுக்கான  இந்த நாளில் உழைப்பவர்களோடு இணைந்து அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எங்களை எழுச்சி கொள்ள வைப்போம். அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராடி, உரிமை பெற்று சமத்துவமாக வாழ்வதே நமது இலட்சியமாகும்.

மே நாள் என்பது இவை அனைத்தையும் எதிர்த்து உடைப்பதற்கான ஒருங்கிணைந்த நமது எழுச்சியையும் பலத்தையும் எதிர்ப்புணர்வையும் பகிரங்கமாக வெளிப்படுத்துவதாகும். இந்த ஒருங்கிணைந்த எழுச்சியோடு நாம் நமது பலத்தைப் பெருக்க வேண்டும். ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புணர்வை வளர்க்க வேண்டும்.

அதற்கான உறுதியை எடுத்துக் கொள்வோம். அதில் உறுதியுடன் நின்று வெற்றியடைவோம். அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்த்து முறியடிப்போம். நம்முடைய அறிவினாலும் ஆற்றலினாலும் வென்று புதிய சமத்துவ, சரித்திரம் படைப்போம் எனத் தெரிவித்தார்.