குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் வெலிமட – கெப்பட்டிபொல பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 24 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேக நபர்களான குறித்த இளைஞரின் காதலியின் 72 வயது தந்தையும் 69 வயது தாயாரும் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய – வெரலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 22 ஆம் திகதி அன்று தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும் இந்த இளைஞர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.