எவரெஸ்ட் மலையின் 18 ஆயிரம் அடி உயரத்தை அடைந்து துபாயில் வசிக்கும் 6 வயது சிறுவன் சாதனை

101 0

துபாயில் வசிக்கும் ரஷிய நாட்டை சேர்ந்தவர் டிமிட்ரி. இவரது மனைவி அல்லா கிராசியுகோவ். இந்த தம்பதிக்கு இவான் என்ற 6 வயது மகன் உள்ளார். துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சிறுவன் இவான் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் தடகளம், அக்ரோபாட்டிக்ஸ், நீச்சல் மற்றும் நடனம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். பெற்றோரின் ஊக்கத்துடன் மலையேறும் பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு வந்ததும் அதற்கான பயிற்சியையும் சிறுவன் இவான் எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில் தானும் எவரெஸ்ட் மலை மீது ஏறி சாதனை புரிய வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.இதற்காக கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகை விடுமுறையில் பெற்றோருடன் சிறுவன் இவான் நேபாளத்துக்கு விமானம் மூலம் சென்றார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு கடுமையான குளிரில் சிறப்பு மலையேற்ற குச்சியை ஊன்றி மலையேற தொடங்கினார். இறுதியில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள அடிவார முகாமை 7 நாட்களில் சென்றடைந்தார். இதன் உயரம் 17 ஆயிரத்து 598 அடியாகும் (5,364 மீட்டர்). இந்த சாதனை குறித்து துபாயில் சிறுவன் இவான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-பேஸ் கேம்ப்பை அடைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அங்கு சென்ற உடன் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஏனென்றால் எனது பயணம் முடிவுக்கு வந்து விட்டது.

மீண்டும் நான் துபாய்க்கு விமானத்தில் வர வேண்டி இருந்தது. அங்குள்ள கும்பு பனிப்பாறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகாக இருந்தது. எனக்கு குளிர்காற்று மிகவும் சவாலாக இருந்தது.அந்த காற்றினால் கைகள் உறைந்து விட்டன. எனது பயணத்தில் நீண்ட முடியுடைய யாக், எருதுகள், கழுதைகள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளை பார்த்து மகிழ்ந்தேன். எதிர்காலத்தில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ, ரஷியாவில் உள்ள எல்பரஸ் ஆகிய மலைகளில் ஏற ஆசையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.6 வயதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமை அடைந்த சிறுவன் இவானுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது .