உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் ஆக்கபூர்வமானவையாகத் தென்பட்டாலும், உள்நாட்டில் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக சகல தரப்பினர் மத்தியிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே இந்த ஆணைக்குழுவின் செயற்திறன்மிக்க இயங்குகையை உறுதிப்படுத்தமுடியும் என புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலக அதிகாரிகள் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.
அதேபோன்று தெற்கிலும், குறிப்பாக கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளை சந்தித்து உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா கடந்த வாரம் லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்களைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்து, உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
அதற்கமைய லண்டனில் கடந்த புதன்கிழமை (24) இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக்கான புலம்பெயர் தமிழர் அமைப்பின் சார்பில் விஸ்வலிங்கம் சிவலிங்கம் மற்றும் தமிழ் தகவல் நிலையம் சார்பில் சார்ள்ஸ் அன்ரனி பிள்ளை ஆகியோர் உள்ளடங்கலாக சிலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் யுவி தங்கராஜா அவர்களுக்கு விளக்கமளித்தார். அதனை செவிமடுத்த அவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் இன்னமும் உரியவாறான தீர்வு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினர். அத்தோடு இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய ஆணைக்குழு நியாயமாக இயங்குவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதேபோன்று நல்லிணக்கம் குறித்து பேசப்படினும், இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கே முதலிடம் எனக் கூறப்பட்டிருக்கும் பின்னணியில் நல்லிணக்கம் எவ்வாறு சாத்தியம் எனவும் அவர்கள் வினவினர்.
இந்நிலையில் புதிதாக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான சிறிய நடவடிக்கைகளையேனும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்திய அவர்கள், குறைந்தபட்சம் வட, கிழக்கு மாகாணசபைகள் முறையாக இயங்குமாயின் தமிழர்கள் தமது தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்திசெய்துகொள்ளமுடியும் என சுட்டிக்காட்டினர்.
மேலும் தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பாக நடுநிலையாக செயற்படக்கூடியவர்கள் நியமிக்கப்படவேண்டியதன் அவசியத்தை யுவி தங்கராஜாவிடம் வலியுறுத்திய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இந்த ஆணைக்குழுவை அதற்குரிய சட்டத்தின் ஊடாக ஸ்தாபிப்பதற்கு முற்படுகின்றமை தமக்கு ஓரளவு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
அதேவேளை யுவி தங்கராஜாவுக்கும் பிரான்ஸின் பாரிஸ் நகரில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவினங்களைச்சேர்ந்த இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு பாரிஸில் உள்ள இலங்கைத்தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கையர்கள் உத்தேச உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிக்காட்டியதுடன், இவ்விடயத்தில் மாத்திரமன்றி பொதுவாகவே புலம்பெயர் இலங்கையர்களுடன் அரசாங்கம் நெருக்கமான தொடர்புகளைப் பேணவேண்டியது அவசியமென வலியுறுத்தினர். அதேபோன்று உள்நாட்டில் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக சகலருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடியவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே இப்பொறிமுறை மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்பமுடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.