புதுவருடத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி விஷேட பஸ் மற்றும் ரயில்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
புதுவருடத்தை முன்னிட்டு மேலதிகமாக 4500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்ப உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. அதில் 1200 பஸ்கள் தூர சேவைகளுக்கான போக்குவரத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளன.
எதிர்வரும் 25ம் திகதி வரையில் இந்த விஷேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளதுடன், குறித்த காலத்தில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. இதேவேளை தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விஷேட ரயில் சேவைகளும் அமுல்படுத்தப்ப உள்ளன.
இதுதவிர அதிவேகப் பாதையில் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக அதிவேகப் பாதை செயற்பாட்டு அலுவலகம் கூறியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கான விஷேட நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட உள்ளன. அத்துடன் புதுவருட சமயத்தில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டாசுப் பயன்பாடுகளின் போது அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புதுவருட சமயத்தில் பட்டாசு மூலமான விபத்துக்களில் அதிகளவானவர்கள் காயமடைவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.