வடக்கில் போதைப்­பொருள் பாவ­னைகள் அதி­க­ரிப்பு

95 0

வடக்கு மாகா­ணத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு இளை­ஞர்கள் போதைப்­பொருள் பாவனை காரண­மாக மர­ணித்­துள்­ளார்கள். இவர்கள் அனை­வரும் 20 முதல் 30 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள்.

குறிப்­பாக, மர­ணித்­த­வர்­களில் சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறை­யி­லி­ருந்து நீதி­மன்­றத்தின் பிணையில் விடு­விக்­கப்­பட்ட நிலையில் தனது விடு­த­லையை கொண்­டாடும் முக­மாக ஏற்­பாடு செய்த போதை விருந்­து­ப­சா­ரத்தின் போது மர­ண­ம­டைந்­துள்ளார்.

மற்­றை­ய­வர்கள், அதி­க­ள­வான போதைப்­பொ­ருளை பயன்படுத்தியமை உள்ளிட்ட கார­ணங்­களால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளாக உள்­ளனர். இந்த மர­ணங்கள் நிகழ்ந்த பின்­னரும் கூட போதைப்­பொருள் பாவனை குறைந்­த­தாக தக­வல்கள் இல்லை.

கடந்த வாரத்தில் குறிப்­பாக 2024.03.26 முதல் 2024.04.16 வரை­யான காலப்­ப­கு­தியில் யாழ்ப்­பா­ணத்தில் போதைப்­பொருள் தொடர்பில் 29 வழக்­கு­களும் தொட­ரப்­பட்­டுள்­ளன. அதில் 23.075 கிராம் அளவு ஹெரோயின் வைத்­தி­ருந்­தமை தொடர்பில் இரண்டு வழக்­கு­களும் 0.08 கிராம் அளவு ஐஸ் வைத்­தி­ருந்த­மைக்­காக ஒரு வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், கஞ்சா பயன்­பாடு மற்றும் வியா­பாரம் தொடர்பில்  21 வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ள­தோடு 21.299 கிலோ­கிராம் கஞ்­சாவும் கைப்பற்றப்­பட்­டுள்­ளது. கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்கும் அதே­நேரம் வடக்கில் போதைப்­பொருள் விவகாரமானது, சமூகப் புற்­று­நோ­யாக தொடர்ந்து கொண்டே செல்கிறது.

பூகோள ரீதியில் ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், இந்­தியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் தெற்குப் பாதை இந்து சமுத்­தி­ரத்­துக்­கூ­டாகச் செல்­கின்­றது. இதற்­கான முக்­கிய கார­ணி­யாக கடல்­வழி அமை­கின்­றது.

அந்தக் கடல்­வ­ழியில் கேந்­திர ஸ்தான­மாக இருப்­பது இலங்கை. இதனால்  இலங்கை பூகோள போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் பிராந்­திய மைய­மாக விளங்­கு­கின்­றது என்று ஆய்­வுகள் தெளி­வு­ப­டுத்­து­கின்­றன.

நாடொன்றின் கடல் எல்­லை­யாக தரை­யி­லி­ருந்து 12 கடல்­மைல்கள் காணப்­ப­டு­கின்ற நிலையில் அந்தக் கடல் எல்­லைக்குள் தான் கைது­களை மேற்­கொள்ள முடியும் என்­பது சர்­வ­தேச கடல் எல்லை விதி­யா­க­வுள்­ளது.

அதற்கு அப்­பாற்­பட்ட கடல்­வெ­ளி­யா­னது எந்­த­வொரு தரப்­பி­ன­ராலும் கண்­கா­ணிக்­கப்­ப­டா­மலேயே உள்­ளது. இதுதான் போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யான ஏது­நி­லையை வழங்­கு­வ­தாக உள்­ளது.

அந்த வகையில், இலங்­கையின் கடல் எல்­லைக்குள் கடத்­தப்­ப­டு­கின்ற போதைப் பொருள் சர்­வ­தேச கடல் எல்­லைக்கு அண்­மையில் வைத்து கொள்­க­லன்­க­ளுக்குள் அடைக்­கப்­பட்டு கொண்­டு­வ­ரப்­பட்டு அதி­லி­ருந்து வெவ்வேறு இடங்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது.

இந்தக் கடத்­தலின் யுக்தி­யாக, சர்­வ­தேச கடல் எல்­லை­யி­லி­ருந்து மீன்­பிடி பட­குகள் மூலம் தான் அதி­க­ளவில் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன. இன்னும் சில போதைப்­பொ­ருள்கள் அதி­காரம் மிக்­க­வர்­களின் செல்­வாக்கால் கொண்டு வரப்­ப­டு­கின்­றன. இதற்கு வேலியே பயிரை மேய்­வது போன்று பாது­காப்புத் தரப்­பினர் சில­ரது பூர­ண­மான ஆத­ரவும் இருக்­கின்­றது.

தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையின் கடந்த 2023 ஜன­வரி முதல் ஜூன் வரை போதைப்­பொருள் துஷ்­பி­ர­யோக கண்­கா­ணிப்பு அமைப்­பினால் பெறப்­பட்ட போதைப்­பொருள் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்ட நபர்கள் பற்­றிய பகுப்­பாய்வு அறிக்கையை அவ­தா­னிக்­கின்­ற­போது போதைப்­பொ­ருளின் வெகு­வான தாக்கம் வெளிப்­ப­டு­கின்­றது.

அத­ன­டிப்­ப­டையில், போதைப்­பொருள் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக 19,544 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு அவர்­களில் 10,396 பேர் கஞ்சா பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளா­கவும் 7,778 பேர் 25 முதல் 29 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் என்­பதும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 98 சத­வீ­த­மா­ன­வர்கள் ஆண்­க­ளாக இருப்­ப­தோடு 2சத­வீ­த­மா­ன­வர்கள் பெண்­க­ளாக உள்­ளனர். மேலும், 10,029 நபர்கள் திரு­ம­ண­மா­ன­வர்­க­ளா­கவும் 7,621 பேர் தனி­மையில் இருப்­ப­வர்­க­ளா­கவும் உள்­ளனர். அவர்­களின் கல்விப் பின்­ன­ணியைக் கருத்திற் கொள்­ளும்­போது கா.பொ.த. சாதா­ரண தரம் முடித்­த­வர்­க­ளி­ட­மி­ருந்தே அதிக அளவு போதைப்­பொருள் பாவனை பதி­வா­கி­யுள்­ளது. 12 பேர் தொழில்­வான்­மை­யா­ளர்­க­ளா­கவும் உள்­ளனர்.

அத்­தோடு இக்­கா­லத்தில் 23 சத­வீ­த­மா­ன­வர்கள் சதா­ரண தொழி­லா­ளர்­க­ளா­கவும் 12.8 சத­வீ­த­மா­ன­வர்கள் வேலை­யில்­லா­த­வர்­க­ளா­கவும் 8.8 சத­வீ­த­மா­ன­வர்கள் விவ­சா­யி­க­ளா­கவும் 3.2 சத­வீ­த­மா­ன­வர்கள் சார­திகள் அல்­லது போக்­கு­வ­ரத்து துறையில் பணி­யாற்­று­ப­வர்­க­ளா­கவும் உள்­ளனர்.

நாடா­ள­விய ரீதியில் நிலை­மைகள் மேற்­கண்­ட­வாறு அமைந்­தி­ருந்­தாலும், போதைப்­பொ­ருளின் தாக்­கத்­துக்கு வடக்கு, கிழக்கு விதி­வி­லக்­கல்ல. வடக்கு, கிழக்கில் போதைப்­பொருள் என்­பது தமிழ் பேசும் இனத்தின் மீது திட்­ட­மிட்டு திணிக்­கப்­படும் ஒரு­வி­ட­யமா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. .

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான ஆயுதப் போராட்டம் முடி­வுக்கு வந்த பின்­னரும் மாறி­மாறி ஆட்­சிப்­பீ­டத்தில் அம­ரு­கின்ற அர­சாங்­கங்கள் வடக்கு, கிழக்கை தொடர்ந்தும் போர்க்­கால சூழ­லி­லேயே வைத்­துக்­கொள்­வ­தையே வெகு­வாக விரும்­பு­கின்­றன.

இதற்­கா­கவே மூன்று பொது­ம­க­னுக்கு ஒரு படை­வீரர் என்ற விகி­தத்தில் முப்­ப­டை­க­ளையும் வடக்கு, கிழக்கில் குவித்து வைத்­துள்­ளது இலங்கை அர­சாங்கம். இதற்கு அப்பால் பொலிஸ், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வி­னரும் செயற்­பட்டு வரு­கின்­றார்கள்.

இவ்­வாறு அதி­க­ரித்த எண்­ணிக்­கை­யான படை­களை வடக்கு, கிழக்கில் இருந்து குறைத்­துக்­கொள்ள வேண்­டு­மென்ற அழுத்­தங்கள் ஏற்­பட்­ட­போது, ஆரம்­பத்தில் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் மீளெ­ழுச்சி பெற்­று­வி­டு­வார்கள் என்று காரணம் கற்­பி­தித்­தது இலங்கை அர­சாங்கம்.

உண்­மையில், வடக்கு, கிழக்கில் போதைப்­பொருள் விநி­யோ­க­மா­னது ஆரம்­பத்தில் போதைப்­பொ­ரு­ளுக்­கான தேவையை அதி­க­ரித்து, வழங்­கலைக் மட்­டுப்­ப­டுத்­து­கின்றபோது, போதைப்­பொ­ருளின் விலை அதி­க­ரிப்­ப­தோடு, பல விநி­யோக வழி­களை  திறப்­ப­தற்­காக வலிந்து தள்­ளப்­ப­டு­வதை நோக்­காக கொண்டே காய்கள் நகர்த்­தப்­பட்­டன.

அந்த நோக்கம் தற்­போது வடக்கு, கிழக்கில் வெற்­றி­கண்­டு­விட்­டது. இலங்­கையின் ஏனைய மாவட்­டங்­க­ளுடன் ஒப்­பிடும்போது இப்­பி­ராந்­தி­யத்தில் உள்ள எட்டு மாவட்­டங்­களில் இளை­ஞர்­களின் சமூக அக்­க­றைகள் திசை­த்தி­ருப்­பப்­பட்டு போதைப்­பொருள் பாவ­னையை நோக்­கி வலிந்து தள்­ளப்­பட்­டுள்­ளது.

இதனால் அதி­க­ள­வான இளை­யோரே போதைப்­பொருள் பாவ­னை­யா­ளர்­க­ளாக மாறி­யுள்­ளனர். அண்­மைய காலத்தில் அவர்கள் போதைப்­பொருளுடன் தொடர்­பு­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்கள் அதி­க­ரித்­துள்­ளன.

இதனால், வடக்கு இளை­ஞர்­களின் எதிர்­காலம் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தோடு, அடுத்த சந்­த­தி­யா­னது, இன­வி­டு­தலைச் சிந்­த­னையில் இருந்தும், அறி­வு­சார்ந்த சமூக கட்­ட­மைப்­பி­லி­ருந்தும் திசை திருப்­பப்­ப­டு­கின்ற செயற்­பாடே சூட்­சு­ம­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையின் கடந்த 2023 ஜன­வரி முதல் ஜூன் வரை போதைப்­பொருள் துஷ்­பி­ர­யோக கண்­கா­ணிப்பு அமைப்­பினால் பெறப்­பட்ட போதைப்­பொருள் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்ட நபர்கள் பற்­றிய பகுப்­பாய்வு அறிக்­கையின் தர­வு­களின் பிர­காரம் அம்­பா­றையில் 438 பேரும், திரு­கோ­ண­ம­லையில் 891பேரும் மட்­டக்­க­ளப்பில் 143 பேரும் வவு­னி­யாவில் 181 பேரும் முல்­லைத்­தீவில் 113 பேரும், மன்­னாரில் 121 பேரும், கிளி­நொச்­சியில் 32பேரும் யாழ்ப்­பா­ணத்தில் 371 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அதே­நேரம், கடற்­படைத் தக­வல்­களின் பிர­காரம் இந்த ஆண்டின் பெப்­ர­வரி 18ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 120 கிலோ­கிராம் ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தோடு 13 நபர்கள் கைது­செய்­யப்­பட்டும் 3 பட­குகள் கைப்­பற்­றப்­பட்­டு­முள்­ளன.

203 கிலோ­கிராம் கேரள கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தோடு 9 நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 189 கிலோ­கிராம் ஐஸ் போதைப்­பொருள் மீட்­கப்­பட்­டுள்­ள­தோடு 17 நபர்­களும் பட­கொன்றுடன் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 39,301 போதை மாத்­தி­ரைகள் மீட்­கப்­பட்­டுள்­ள­தோடு அது­கு­றித்த குற்­றச்­சாட்டில் 9 நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

எனினும், தற்­போதும் கூட வடக்கு, கிழக்கு கடற்­ப­ரப்பில் இனந்­தெ­ரி­யாத பட­குகள் போதைப்­பொ­ருட்­க­ளுடன் ஒதுங்­கு­வதும், பொதி­செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருட்கள் மிதந்து வரு­வதும் தொடர்ந்­துக்­கொண்டே இருக்­கின்­றன.

உண்­மையில் வடக்கு, கிழக்கில் முப்­ப­டை­யி­னரும், புல­னாய்­வா­ளர்­களும் குவிக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும், போதைப்­பொருள் பாவ­னையும், போதைப்­பொருள் உள்­வ­ரு­கையும் தொடர்­வ­தாக இருக்­கின்­ற­தென்றால் நிச்­ச­ய­மாக அதன் மூலங்கள் யார் என்­பது தான் தற்­போ­துள்ள பெருங்­கேள்­வி­யாக உள்­ளது.

அதே­நேரம், 1984ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டு சபை, 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க போதைப்­பொருள் சார்ந்த நபர்கள் (சிகிச்சை மற்றும் மறு­வாழ்வு) சட்டம், 1984 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க விஷம், ஓபியம் மற்றும் ஆபத்­தான மருந்­துகள் (திருத்தம்) சட்டம், 2006 ஆம் ஆண்டு 27ஆம் இலக்க புகை­யிலை மற்றும் மது­பானம் மீதான தேசிய ஆணையம்,  2022ஆம் ஆண்டின் 41இலக்க விஷம், ஓபியம் மற்றும் ஆபத்­தான மருந்­துகள் (திருத்தம்) சட்டம் ஆகிய சட்­டங்கள் போதைப்­பொ­ருட்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக ஏற்­பா­டு­க­ளா­கி­யுள்­ளன.

இத­னை­வி­டவும், 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க போதைப்­பொருள் சார்ந்த நபர்கள் (சிகிச்சை மற்றும் மறு­வாழ்வு) ஒழுங்­கு­ப்ப­டுத்தல் ஏற்­பாடு, போதைப்­பொருள் மற்றும் மன­நோய்க்­கான சட்­ட­வி­ரோத போக்­கு­வ­ரத்­துக்கு எதி­ரான உடன்­ப­டிக்­கைகள், 2008ஆம் ஆண்டின் முத­லா­மி­லக்க போதைப் பொருள்கள் ஒழுங்­கு­ப­டுத்­தல்கள் ஆகி­ய­னவும் காணப்­ப­டு­கின்­றன.

இத­னை­வி­டவும், இலங்­கையின் போதைப்­பொருள் பாவ­னையைத் தடுப்­ப­தற்கும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான தேசியக் கொள்­கையும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் இவை­ய­னைத்தும் காணப்­பட்­டாலும், போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான போராட்­ட­மா­னது வெறு­மனே அதி­காரிகள், பாது­காப்புத் துறை­யி­ன­ருக்கு அப்பால் இளம் தலை­மு­றை­யி­னரின் பெற்­றோர்கள் மற்றும் உற­வி­னர்­க­ளாலும் முன்­னெ­டுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கி­யத்­துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், யாழ்.மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்தவாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றபோது, போதைப்பொருள் விடயம் பேசுபொருளானது.

 

அதன்போது, போதைப்பொருள் தொடர்பில் சிறுமீன்களே அகப்படுகின்றன. ஆனால் பெரும் முதலைகள் பாதுகாப்பாக உள்ளன என்ற தொனிப்படக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில், ஹெரோயின் போன்றபோதைப்பொருட்கள் கிடைப்பதில்லை. அதற்காக மனோநிலை சரியில்லாதவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகளே போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று பொலிஸார் தரப்பில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், மீண்டும் பொலிஸாரும் வடக்கின் போதைப்பொருள் வியாபாரத்துக்கு துணைபோவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கினைப் பொறுத்தவரையில் ஒரேயொரு தரைவழித்தொடர்பு தான் காணப்படுகின்றது. ஏனைய மூன்று பக்கங்களும் கடல்வழித் தொடர்புகளே காணப்படுகின்றது.

ஆகவே, போதைப்பொருள் உட்பிரவேசிப்பதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றபோது தான் அவற்றை கட்டுப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.