இலங்கையில் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரத்தின்மீது மட்டுப்பாடுகள்

70 0

இலங்கையில் ஊடக சுதந்திரம், விரும்பிய மதம் மற்றும் நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுவதாக ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ எனும் சர்வதேச அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ இவ்வாண்டில் உலகநாடுகளின் சுதந்திரம் தொடர்பான அதன் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் இலங்கை தொடர்பான மதிப்பீட்டைப் பொறுத்தமட்டில், அரசியல் உரிமைகளுக்கு 40 க்கு 22 புள்ளிகளும், சிவில் சுதந்திரத்துக்கு 60 க்கு 32 புள்ளிகளும் என நாட்டின் ‘சுதந்திர நிலைவரத்துக்கு’ மொத்தமாக 100 க்கு 54 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

‘2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் தென்பட்டன. இருப்பினும் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட போரின் பின்னரான பிரச்சினைகளைக் கையாள்வதில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மந்தகரமாகவே செயற்பட்டது.

அதனைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி மற்றும் 2020 பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி ஆகியவற்றின் அடுத்து ராஜபக்ஷ குடும்பம் வலுப்பெற்றது. இருப்பினும் 2022 இல் பொருளாதார நெருக்கடி, தவறான ஆட்சி நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகள் என்பவற்றின் விளைவாக எழுச்சியடைந்த ‘அரகலய’ எதிர்ப்புப்போராட்டங்களின் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்’ என்று அம்மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையின் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் ஆகிய இரு பிரதான விடயங்களின்கீழ் அடங்கும் முக்கிய கூறுகளுக்கு மொத்தமாக 4 என்ற புள்ளிக் கட்டமைப்பின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய அரசியல் உரிமைகளில் தேர்தல் செயன்முறை எனும் விடயப்பரப்பின்கீழ் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர் முறையான தேசிய தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டாரா என்பதற்கு 3 புள்ளிகளும், தற்போது இயங்குநிலையில் உள்ள பாராளுமன்றம் முறையான தேசிய தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டதா என்பதற்கு 3 புள்ளிகளும், நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களும் செயன்முறைகளும் நியாயமானவையா மற்றும் அவை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பக்கச்சார்பற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றவா என்பதற்கு 3 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று அரசியல் பல்வகைமை மற்றும் பங்கேற்பு எனும் விடயப்பரப்பின்கீழ் பொதுமக்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் வௌவேறு அரசியல் குழுக்களாக ஒருங்கிணைவதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றார்களா என்பதற்கு 3 புள்ளிகளும், தேர்தல் ஊடாக தமக்கான ஆதரவையோ அல்லது அதிகாரத்தையோ மேம்படுத்திக்கொள்வதற்கான உண்மையான வாய்ப்பு எதிர்க்கட்சிக்கு இருக்கின்றதா என்பதற்கு 2 புள்ளிகளும், மக்களின் அரசியல் தேர்வுகள் ஏனைய அரசியல் அல்லது அரசியல் அல்லாத புறக்காரணிகளின் ஆதிக்கத்துக்கு உட்படாதவையாக இருக்கின்றனவா என்பதற்கு 2 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அரசாங்கத்தின் இயங்குகை எனும் விடயப்பரப்பின்கீழ் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் அரச தலைவரும், பாராளுமன்றமுமே அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றதா என்பதற்கு 2 புள்ளிகளும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வலுவானவையாகவும் செயற்திறன் மிக்கவையாகவும் உள்ளனவா என்பதற்கு 1 புள்ளியும், அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகின்றதா என்பதற்கு 2 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக சிவில் சுதந்திரத்தில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் எனும் விடயப்பரப்பின்கீழ் சுதந்திர ஊடக செயற்பாடு உள்ளதா என்பதற்கு 3 புள்ளிகளும், தனிநபர்கள் தமது மத நம்பிக்கைகளை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது பொதுவெளியிலோ பின்பற்றுவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றார்களா என்பதற்கு 2 புள்ளிகளும், கல்வித்துறையானது அரசியல் தலையீடுகள் அற்ற நிலையில் உள்ளதா என்பதற்கு 2 புள்ளிகளும், அரசியல் அல்லது ஏனைய நுண்ணுணர்வுமிக்க விடயங்கள் தொடர்பில் கண்காணிப்புக்கு உட்படக்கூடும் என்ற அச்சமின்றி தமது கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரம் நபர்களுக்கு உள்ளதா என்பதற்கு 2 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.