- கோட்டாபயவின் கருத்து அடிப்படையற்றது
- தப்புல குறிப்பிட்ட சதி குறித்து ஏன் விசாரிக்கவில்லை?
- ரணிலுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இன்னும் பதில் இல்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காண்பிக்காமல் இருப்பதிலிருந்தும், உண்மைகளை மறைக்க முற்படுவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இதில் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. தற்போதைய அரசாங்கத்துக்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றால் உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க சபையும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை முற்றாக மறுப்பதாகக் தெரிவித்த பேராயர், தனது இயலாமைக்கு தானனே தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு ஏனையோர் மீது குறை கூறுவது பொறுத்தமற்றது என்றும் சாடினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட நினைவேந்தல் நிகழ்விலேயே பேராயர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் திருத்தலம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், கொழும்பிலுள்ள ஷங்ரிலா, சினமன் கிரான்ட், கிங்ஸ்பெரி ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த துரதிஷ்டவசமாக தாக்குதல்களால் 273 அப்பாவி பொது மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்டது. இவர்களில் 82 சிறுவர்களும், 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்தோடு 500க்கும் மேற்பட்டவர்கள் சிறிய அல்லது பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்றும் அங்கவீனமுற்றவர்களாகவுள்ளனர். இந்த தாக்குதல்கள் நாட்டின் அரசியலுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியதோடு, பொருளாதாரத்திலும் பாதகமான தாக்கத்தை செலுத்தியது. அன்று வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இன்று வரை கட்டியெழுப்ப முடியாமலிருப்பதிலிருந்து அந்த தாக்குதல்கள் எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளன என்பதை எமக்கு உணர்த்துகின்றன.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அப்போதைய அரசாங்கத்தினால் நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான குழுவொன்றும், பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பவற்றின் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறித்த அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொறுப்பு உரித்தாக்கப்பட்டது.
தேர்தலுக்கு முன்னர் நீர்கொழும்பு மற்றும் ஜாஎல பிரதேசங்களில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்களிலும், கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதும் தான் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாக கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். எனினும் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு மறுநாள் தன்னால் குறித்த பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று தொலைபேசியில் எனக்கு தெரிவித்ததை இங்கு நினைவு கூர்கின்றேன்.
அதன் பின்னர் அந்த அறிக்கையின் முதற் பகுதியை எமக்கு வழங்குவதை தாமதப்படுத்தியதோடு, ஏனைய பகுதிகளை வழங்காமலேயே இருந்தார். குறித்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை மாத்திரம் நடைமுபை;படுத்தி, தமது அமைச்சரவை அமைச்சர்கள் அறுவர் அடங்கிய குழுவொன்றை நியமித்தார். எவ்வாறிருப்பினும் எந்த வகையிலும் வழங்கிய வாக்குறுதியi நிறைவேற்றாத கோட்டாபய ராஜபக்ஷ எம் கண் முன்னே ஆட்சி காலம் நிறைவடைய முன்னரே அதனை விட்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு 2021 ஜூலையில் கத்தோலிக்க ஆயர் பேரவை அனுப்பி கடிதத்துக்கு இன்று வரை பதில் கடிதம் கூட கிடைக்கவில்லை.
அதே போன்று 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆயர் பேரவையால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றதாகக் கூட பதில் கடிதமொன்று வழங்கப்படவில்லை. புதிதாக வெளிப்படுத்தப்படும் தகவல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், இந்த அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவதில் செயற்படும் விதமானது எமக்கு இந்த ஆட்சியிலும் நியாயம் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்த்துகிறது. இவை அனைத்தின் ஊடாகவும் பாரதூரமான சந்தேகமொன்று எழுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள உண்மைகளை மறைப்பதற்கு கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தாக்குதல்களுடன் தொடர்புடைய சில நபர்களையும், நிறுவனங்களையும் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கமும் முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது என்பதைத் தவிர வேறொரு எண்ணப்பாட்டுக்கு எம்மால் வர முடியாது. அவர்களுக்கு இதனுடன் தொடர்பில்லை என்றால் உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது.
தாக்குதல்களின் பின்னணியில் அடிப்படைவாத முஸ்லிம்கள் காணப்படுகின்றமை உண்மை என்ற போதிலும், அவர்களின் பின்னால் வேறு சக்திகளும் இருக்கின்றமைக்கான சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமையிலிருந்தும், சாட்சிகளை மறைக்க முற்படுவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இந்த தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான தேவை காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.
வெளியாகியுள்ள புதிய தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமல், அவற்றை மறைப்பது கவலைக்குரிய விடயமாகும். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று இந்த தாக்குதல்கள் தொடர்பில் தெரிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசியல் மற்றும் பாதுகாப்பு துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவரும் அதனை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுகின்றமையை கண்டிக்கின்றோம்.
கடந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் எமது கோரிக்கையை பொருட்படுத்தாமையின் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்கிற்கு இதனை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டது. தாக்குதல்களின் இடம்பெற்ற போது சட்டமா அதிபராக பணியாற்றிய தப்புல டி லிவேரா 2021 மே 17ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில், தெரிவித்தவாறு இந்த தாக்குதல்களின் பின்னால் காணப்பட்ட பாரதூரமான சதி என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள நூலில், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க சபையும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளமை நியாயமற்ற காரணியாகும். தேர்தலுக்கு முன்னர் அவர் மீது நம்பிக்கை காணப்பட்டது என்பது உண்மையாகும். ஆனால் அதன் பின்னர் அவர் செயற்பட்ட விதம் அந்த நம்பிக்கையை முற்றாக இழக்கச் செய்தது. காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பங்கேற்றனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதில் சகல மதத்தவர்களும் பங்கேற்றனர் என்பதையும் அவர் மறந்து விடக் கூடாது.
தற்போதைய அல்லது இனிவரும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாகும். அவ்வாறில்லை எனில் அது இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். உண்மைகளை மறைத்து ஏனையோர் மீது குற்றஞ்சுமத்துவது நாட்டுக்கு நன்மையாக அமையாது. எமக்கான நியாயம் நிலைநாட்டப்படும் வரை எமது கோரிக்கைகளும், போராட்டங்களும் தொடரும் என்றார்.